இலங்கை: இந்து ஆலயங்கள் மீது மீண்டும் தாக்குதல்

இலங்கை கிழக்கு மாகாணத்தில் அடையாளந் தெரியாத ஆட்களினால் இந்து ஆலயமொன்றின் விக்கிரகம் தூக்கி வீசப்பட்டு, மற்றுமோர் ஆலயத்தின் கோபுர கலசமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

Image caption பத்தினி அம்மன் ஆலய கோபுரம்

திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியிலுள்ள கூழாவடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

கூழாவடி பிள்ளையார் ஆலயத்தில் மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையார் அகற்றிய இந்நபர்கள் அதனை அருகாமையிலுள்ள காணியொன்றுக்குள் வீசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Image caption தூக்கி வீசப்பட்ட பிள்ளையார் சிலை

இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை வழமை போல் ஆலய பணிக்கும் வழிபாட்டுக்கும் சென்றிருந்த பெண்ணொருவர், இது தொடர்பாக நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மற்றுமோர் சம்பவத்தில் பத்தினி அம்மன் ஆலயம் மீதான தாக்குதலின் போது ஆலயத்தின் கோபுர கலசம் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை பொறுத்தவரை தமது பகுதியில் இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பின்னணியில் நடைபெற்றிருக்கலாம் என உள்ளுர் மக்கள் கருதுகின்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகங்களினால் காவல்துறையில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவமொன்றின் போது வாகனேரி ஶ்ரீ சத்தி வினாயகர் ஆலயமும் தாக்கப்பட்டு பிள்ளையார் சிலை தகர்க்கப்பட்டு உடைக்கப்பட்டும் உடமைகள் சேதமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய தலைப்புகள்