இலங்கை வில்பத்து சரணாலய பகுதியில் முஸ்லிம்கள் காடுகளை அழிப்பதாக குற்றச்சாட்டு

இலங்கையில் வில்பத்து சரணாலய வனப் பகுதியில் முஸ்லிம்கள் காடுகளை அழிப்பதாக மீண்டும் குற்றச்சாட்டுக்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று உண்மை நிலையை அறிய வேண்டும் என முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும் முஸ்லிம் சிவில் அமைப்புகளினாலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த '' வில்பத்து பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடு '' என்ற தொனியிலான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தக் கருத்து பலராலும் கூறப்பட்டது.

தலைநகர் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர்களான ரிஸாத் பதியுதின் , ஏ.எச்.எம் .பௌஸி , இராஜங்க அமைச்சர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் , துணை அமைச்சர் அமீர் அலி , நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் ஆகியோருடன் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வில்பத்து வன பகுதியை அழித்து முஸ்லிம்கள் குடியேறுவதாக சூழல் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

வில்பத்து சரணாலயத்தை விஸ்தரித்து வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்த போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுடன் இடம் பெற்று கலந்துரையாடலொன்றின் போது கடந்த வாரம் தெரிவித்திருந்தார்

குறித்த விடயங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலின் போது கருத்துக்களை முன் வைத்த .முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறிப்பாக '' வில்பத்து தொடர்பாக எழுந்துள்ள மாறுபட்ட கருத்துக்களை வைத்து அரசாங்கமோ ஜனாதிபதியோ தீர்மானங்கள் எடுக்கக் கூடாது '' என அமைச்சர்கள் வலியுறுத்திக் கூறினர்

இது தொடர்பாக ஜனாதிபதியையும் பிரதமரையும் அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக சந்தித்துப் பேசுவது என்ற தீர்மானம் பற்றியும் ஏற்பாட்டாளர்களினால் அறிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரகுமான் '' வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறும் வேளை நில ஆக்கிரமிப்பு செய்வதாக இனவாதிகளினால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது " என்றார்.