சீனாவுக்கு வழங்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இதுவரை தயாராகவில்லை - சிறிசேன தகவல்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதியிலுள்ள காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கும் ஒப்பந்தம் இதுவரை தயார் செய்யப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அந்தப் பகுதி காணிகளை முதலீட்டாளருக்கு வழங்கும் ஒப்பந்தம் நாளை கையெழுத்திடப்படவுள்ளது என பொய் தகவல்களை சிலர் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை தயார் செய்வதற்காக மூன்று அமைச்சரவை செயலாளர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதி சிறிசேன, அந்த குழு இறுதி அறிக்கையை இதுவரை வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறிய அவர், தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் சாசனத்திற்கு அமையவே இத்தகைய ஒப்பந்தங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஒப்பந்தம் தயாரான பின்னர், அதன் வரைவை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னரே, அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்