சீன துறைமுக திட்டத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் போராட்டம், மோதல்

லங்கையின் தென் பகுதியில், சீனாவின் முதலீட்டுடன் மேம்படுத்தப்படும் துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைப்பதற்காக, ஆயிரக்கணக்கான கிராம மக்களை வெளியேற்றும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு மோதல் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரணில் - சிறிசேன

அம்பாந்தோட்டை தொழில் மண்டல அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் இலங்கைப் பிரதமர் உரையாற்றவிருந்த நேரத்துக்கு சற்று முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு அருகே மோதல் வெடித்தது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த பிக்குகள் மற்றும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்த பிக்குகளையும் கிராம மக்களையும் அரசு ஆதரவாளர்கள் தாக்கினார்கள். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட முயன்றனர். இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தை சீனக் காலனியாக மாற்ற தங்களை வெளியேற்ற அரசு முயல்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சீனாவுக்கு 99 ஆண்டு கால ஒப்பந்தத்தில் துறைமுகப் பகுதியை குத்தகைக்கு விட ஒப்பந்தத்தை தயாரித்து வரும் அரசு, புதிய நிலம் வழங்கப்படும் என்று கூறுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அதற்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளுக்கும் கடல் வழி பட்டுப்பாதை அமைக்கும் மாபெரும் இலக்கின் ஒரு பகுதியாக சீனா இங்கு முதலீடு செய்வதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, துறைமுகத் திட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகே அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

அரச காணிகள் மட்டுமே பயன்படுத்தப்படும்: ரணில்

பலத்த பாதுகாப்புக்கு மத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலிட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். அம்பாந்தட்டை மிரிஜ்ஜவில பகுதியில் இந்த முதலீட்டு வலையம் அமைக்கப்படுகிறது.

இலங்கைக்காக சீன துதுவர் உற்பட அமைச்சர்கள், அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க இந்த அபிவிருத்தி திட்டத்துக்காக தென் மாகாணத்தில் 1235 ஏக்கர் நிலம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரச காணிகள் மட்டுமே இந்த திட்டத்துக்காக பயன்படுத்தப்படுமென்று கூறிய பிரதமர், மக்களின் வீடுகள் மற்றும் புத்த விஹாரைகள் உடைக்கப்பட மாட்டாதென்று கூறினார்.

இந்த திட்டத்தின் முலம் ஐந்து பில்லியன் டாலர் சீன முதலீடுகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பிரதமர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

-

தொடர்புடைய தலைப்புகள்