நல்லிணக்க ஆலோசனை செயலணியின் பரிந்துரைகளை இலங்கை அரசு செயல்படுத்த உலகத் தமிழர் பேரவை கோரிக்கை

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள்குறித்து விசாரித்து வரும் நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டுமென உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

கடந்த ஜனவரி 3-ஆம் தேதியன்று, பல முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கி ஒரு விரிவான அறிக்கையை நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணி வெளியிட்டது. இதனை வரவேற்ற உலகத் தமிழர் பேரவை, இப்பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த ஒரு வருடமாக இலங்கை முழுவதும் கலந்தாய்வு மேற்கொண்ட 11 உறுப்பினர்கள் அடங்கிய நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழு , முழுமையாக மற்றும் ஒருமனதாக இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. இப்பணியை திறன்பட செய்து முடித்தமைக்கு அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

'இலங்கையின் பல் வேறு சமூக பிரிவுகளை சேர்ந்தவர்கள் செயலணி குழுவின் உறுப்பினர்களாக அங்கம் பெற்றிருப்பதும், வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் விருப்பங்கள் மற்றும் கவலைகள் அவர்களின் கலந்தாய்வில் பிரதிபலிக்கப்பட்டுள்ளதும், உலக அளவில் பகிரப்பட்ட மானுட உரிமைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் இன மற்றும் மத ரீதியிலான வேறுபாடுகளை தாண்டி இலங்கை சமூகம் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது' என்று உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை, மேலும் தெரிவித்துள்ளது.

Image caption இலங்கை உள்நாட்டுப் போரில் எண்ணற்ற குடும்பங்கள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் இப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமரசம் தொடர்பான அலுவலகத்தின் தலைவரான முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மூன்று முக்கிய இலங்கை அமைச்சர்களின் முன்னிலையில் செயலணியின் விரிவான அறிக்கையை பெற்றுள்ளது, இந்த அறிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதையும், சிங்களர், தமிழர் மற்றும் முஸ்லீம் ஆகிய மூன்று முக்கிய இனங்களுக்கும் இடையேயான இணக்கப்பாடு எந்தளவு அத்தியாவசியமானது என்பதையும் விளக்குகிறது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் அமைப்பதே சிறந்தது என்ற செயலணியின் பரிந்துரை , இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் கருத்தையொட்டி அமைந்துள்ளது என்று தெரிவித்த உலகத் தமிழர் பேரவை, இலங்கையின் உள்ளூர் நீதி அமைப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்படும் தமிழ் சமூகத்தின் கருத்தை அண்மையில் வெளிவந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு வலுப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை

அதனால், இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை அரசு மிகவும் துணிச்சலாக செயல்பட்டு நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணியின் வெளியிட்டுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டுமென்று உலகத் தமிழர் பேரவை தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க: பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்