இலங்கையில் வறட்சி, முப்படையினர் மூலம் நிவாரணப் பணிகள்: ஜனாதிபதி சிறிசேன

இலங்கையில் வறட்சி நிலவும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகளில் முப்படையினரும் ஈடுபடுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை சீனன்குடா விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது மழை இன்மையால் பல பாகங்களிலும் வறட்சி காணப்படுகின்றது. இதனை தனது உரையில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ''இந்த வறட்சி நாடு முகம் கொடுத்துள்ள பிரதான சவால் '' என்றார்.

மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிவில் அதிகாரிகளுடன் முப்படையினரையும் இணைந்து ஈடுபடுத்துவது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை ) பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

''குறிப்பாக வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் குடி நீர் வழங்கல் , ஏனைய நலன்புரி நடவடிக்கைகளில் தற்போது ஈடுபடுத்தப்படவுள்ள முப்படையினர் எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் உணவு விநியோகம் போன்ற பொறுப்புகளும் வழங்கப்படும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.