யாழ் பல்கலை மாணவர்களின் கொலை வழக்கில் போலிஸ் அதிகாரிக்கு சம்மன்

காங்கேசன்துறை குளப்பிட்டி சந்தியில் கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரை விசாரணை செய்த மாங்குளம் காவல்துறை அதிகாரியை வரும் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.சதீஸ்கரன் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த மாணவர்கள் மீது வீதி சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு மாணவன் கொல்லப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் மற்ற மாணவன் கொல்லப்பட்டார்.

அந்த சம்பவத்தின்போது கடமையில் இருந்த ஐந்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை முதலில் போக்குவரத்து விதிகளின் கீழ் பதிவு செய்ய உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உத்தரவிட்டவர் யார் என்பது பற்றிய விசாரணை அறிக்கை, காவல்துறையின் விசாரணை அறிக்கை, சூடு நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பற்றிய விசாரணை அறிக்கை, கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோரை மாங்குளத்திற்கு அழைத்து விசாரணை செய்த காவல்துறை அதிகாரியிடம் நடத்திய விசாரணை அறிக்கை என்பவற்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் புலனாய்வு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த அறிக்கை வெள்ளிக்கிழமை விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் புலனாய்வு காவல்துறையினதைக் கடுமையாகக் கடிந்துகொண்ட நீதவான், இந்த வழக்கைத் திசை திருப்ப முயற்சி நடக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

அத்துடன் வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய தினம் மாங்குளம் காவல்துறை அதிகாரியை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் யாழ் நீதவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.