வறட்சியால் இலங்கையில் களை இழந்த பொங்கல் பண்டிகை

இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இந்த வருடம் தைப் பொங்கல் பண்டிகை வழமைக்கு மாறாக விவசாயிகள் மத்தியில் களை கட்டவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இலங்கை விவசாயி (கோப்புப்படம்)

கடந்த வருடம் பெய்ய வேண்டிய பருவ மழை வீழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் காரணமாகவே தைப் பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை என கூறப்படுகின்றது.

இலங்கையில் பருவ கால நெல் வேளாண்மை செய்கை 70 சத வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு கூறுகின்றது.

மழையை நம்பி பயிரிடப்பட்ட நிலத்திற்கு தேவையான அளவு நீர் இல்லாதலால் விவசாயிகள் தங்கள் முதலீட்டை கூட பெற முடியாத நிலையே காணப்படுகின்றது.

சூரிய பகவான்க்கு பொங்கல் பொங்கி தங்களது நன்றிக் கடனை விவசாயிகள் வழமைபோல் நிறைவேற்றிக் கொண்டாலும் அவர்களிடையே வழமையான உற்சாகத்தைக் காண முடியவில்லை கூறப்படுகின்றது.

'' தை பிறந்தால் வழி பிறக்கும் '' என்ற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தங்களுக்கு இம் முறை அது ஏமாற்றமாகவே இருப்பதாக விவசாயிகளினால் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது .

விவசாய மாவட்டங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் உட்பட 70 ஆயிரம் குடும்பங்கள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் கூறுகின்றன.

குளத்தை நம்பி செய்கை பண்ணப்பட்டுள்ள 30 சத வீதமான நெல் வேளாண்மை செய்கையும் பனி காரணமாக நோய்களின் தாக்கத்திற்குள்ளாகியிருப்பதாக விவசாயிகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதே நிலை தான் இலங்கையிலுள்ள அனைத்து விவசாய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது.