வவுனியாவில் புதிய மத்திய பேருந்து நிலையம் திறப்பு

வடமாகாணததில் 195 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் கட்டியமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை போக்குவரத்து மற்றும் பயணியர் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று திங்கட்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.

பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கி வருகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகள் நின்று உள்ளுரிலும் மாகாணங்களுக்கிடையிலும் சேவையாற்றும் வகையிலான நவீன வசதிகளை உள்ளடக்கியதாக இந்த வடமாகாண மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குதல் என்பவற்றின் அடையாளமாக இந்த பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தால் கையளிக்கப்படுவதாக இந்த நிகழ்ச்சியின்போது உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்

இந்த வைபவத்தில் மத்திய போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க கைத்தொழில் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமாகிய் ரிசாட் பதியுதீன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த வடமாகாண போக்குவரத்து துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன், பொதுஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுத்நதிரக் கட்சி ஆகியவற்றின் மாவட்ட அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதன் மூலம் தேசிய நல்லிணக்கத்திற்கு வலுசேர்த்;திருப்பதாகவும் அமைச்சர் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இருபத்தி நான்கு மணி நேரமும் இந்த மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான பேருந்து சேவைகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஓமந்தையில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை நவீன முறையில் அமைக்கப்பட்டிருப்பதைப் போன்று, ஓமந்தையில் இருந்து தெற்கே அனுராதபுரம் வரையிலான ரயில் பாதையை நவீன முறையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இந்த ரயில் பாதையைப் புனரமைக்கும்போது மூன்று மாதங்களுக்கோ அல்லது ஆறு மாதங்களுக்கோ இந்தப் பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்படக்கூடும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்