இலங்கை: சுமந்திரனை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Image caption நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் போராளிகள் என்று போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் தற்போது தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

போலீசார் தெரிவித்துள்ள தகவலின்படி வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது குண்டு தாக்குதலை மேற்கொண்டு அவரை கொலை செய்ய சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Image caption எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளா?

இந்த கொலை திட்டத்தின் பின்னணியில் இருக்கின்ற நபர்களை அடையாளம் காண்பதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள போலீசார் விசாரணைகள் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களை குறைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த கொலை முயற்சி சம்பந்தமாக அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பலத்த கருத்து முரண்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வட கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று போராடி வருகின்றார்.

ஜனநாயக ரீதியாகவே அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் வர்ணசிங்க, பயங்கரவாதம் மீது நமபிக்கை வைத்திருக்கும் கூட்டமைப்பின் சில சக்திகள் இந்த கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த சக்திகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம் காட்டக்கூடாதென்று அவர் தெரிவித்தார்

இது தேசிய பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல் என்று கூறிய நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, இதனை முறியடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மேலும் வேண்டுகோள் விடுத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்