இலங்கை : போதை பொருளுக்கு எதிரான போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்க சிறிசேன வலியுறுத்தல்

இலங்கையில் போதைப் பொருள் பயன்பாடு சமூகத்தில் வேகமாக பரவி வருவதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனால் ஏற்படுகின்ற அழிவுகள் யுத்தத்தை விட கூடுதலானது என்றுதெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் நடைபெற்ற போதைப் பொருள் ஓழிப்பு விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, இதனை அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள், பாடசாலை மாணவர்கள் உட்பட சமூகத்தில் பல்வேறு வகைகளில் பரவி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ''இதற்கு எதிரான போராட்டங்கள் வீதிகளில் ஆரம்பிப்பதை விட வீடுகளிலிருந்து தொடங்க வேண்டும் '' என்றும் சுட்டிக்காட்டினார்.

'' மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் விடுபட வேண்டும் என்றால் மதுப் பாவனையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். அது போன்று மது மற்றும் போதைப் பாவனைகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ முன் வர வேண்டும் '' என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிரணியினரால் முன்னெடுக்கப்படுகின்ற பிரச்சாரங்கள் தொடர்பாக தனது உரையில் குறிப்பிட்ட அவர், ''அவர்களால் தற்போதைய அரசாங்கத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. நாட்டை பிரிக்கப் போவதாகவும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து விட்டதாவும் அவர்களால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது '' என்று அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்