இலங்கை: ’மாற்றுத்திறனாளிகள் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை’

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 69 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என்று வடமாகாண மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் வெ.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Image caption ’சக்கர வண்டியில் நடமாடும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி செல்வதற்குரிய வசதிகள் வாக்குச் சாவடிகளில் இல்லை’

நாளை இடம்பெறவுள்ள 68 ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாற்றுத்திறானிகளின் அடிப்படை உரிமையாகிய நடமாடும் சுதந்திரம்கூட இன்னும் சரியான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

சுதந்திர தினம்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாகத் தாங்கள் உணர்ந்துள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை சுதந்திர தினத்தை தாங்கள் புறக்கணிக்கவோ அல்லது அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவோ எந்தவிதமான தீ;ர்மானங்களையும் எடுக்கவில்லை என சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.

உரிமைகள் மறுப்பு

மாற்றுத்திறனாளிகளின் அரசியல் மற்றும் வாக்களிக்கும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், தகவல் அறியும் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்று இந்த சந்திப்பில் கலந்து கொண்ட வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்படுகின்ற ஒன்பது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மாற்றுத்திறனாளிகள் வாக்குரிமை பெற்றிருந்தாலும், வாக்களிப்பு நிலையங்களில் குறிப்பாக உறுப்புகள் செயலிழந்து, சக்கர வண்டிகளில் நடமாடுகின்ற மாற்றுத்திறனாளிகள் தடையின்று செல்வதற்குரிய வசதிகள் செய்யப்படுவதில்லை. இதனால் அவர்களின் வாக்களிக்கும் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது.

பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாகத் தகுதி பெற்றிருந்தாலும், அவர்கள் மற்றவர்களின் உதவியின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் குற்றெழுத்து முறையான பிரெய்லி வாக்குச் சீட்டுக்களில் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்படாமல் இருப்பதால் அவர்களுடைய உரிமையும் மறுக்கப்படுகின்றது.

செவிப்புலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளான வாக்காளர்களுக்கு அவசியமான சைகை மொழியூடான தொடர்பாடல் வசதிகள் வாக்களிப்பு நிலையங்களில் செய்யப்படாமல் இருப்பதால், அவர்களுடைய வாக்களிக்கும் சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது என்று இந்த ஊடக சந்திப்பின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயலாமைகளோடு வாழும் வாக்காளர்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்ற அரசியல் கட்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தமது கட்சிகளில் உறுப்பினராக சேர்க்காமலும், அவர்களில் தகுதியானோரை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதாலும் அவர்களின் அரசியல் சுதந்திரம் பறிக்கப்படுவதாக சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும், பொதுப் போக்குவரத்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி நடமாட்டத்திற்கு ஏற்ப வசதிகள் செய்யப்படாததால் அவர்களுடைய நடமாடும் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது.

அதேவேளை அச்சு வடிவில் வெளியிடப்படுகின்ற அரசின் தகவல்கள் எதுவும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்து வடிவில் வழங்கப்படுவதில்லை.

தொலைக்காட்சி செய்திகள் தகவல்களை செவிப்புலனற்றவர்களும் அறிந்து பயன்பெறும் வகையில் சைகை மொழியில் அவை ஒளிபரப்புச் செய்யப்படுவதில்லை. இதனால் இந்த மாற்றுத்திறனாளிகளின் தகவல் அறியும் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என, இந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்