ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த பிரதியை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை

படத்தின் காப்புரிமை Getty Images

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன முதலீட்டாளர்களுக்கு கையளிக்கும் நடவடிக்கைகள் கடந்த 2012 ம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்டதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட துறைமுகத்தை சீன முதலீட்டாளர்களுக்கு கையளிக்கும் ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கூட்டு எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சமர்ப்பித்துள்ள மனு இன்று விசாரிக்கப்பட்ட போதே அரச தரப்பின் வழக்கறிஞர் இதனை தெரிவித்தார்.

அரச தரப்பின் வழக்கறிஞர் கருத்துக்களை தெரிவித்த போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன முதலீட்டாளர்களுக்கு கையளிக்கும் நடவடிக்கை தற்போது திடீரென ஆரம்பிக்கப்பட்டது அல்ல என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (கோப்புப்படம்)

அந்த நடவடிக்கைகள் 2012-ஆ ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த அரச தரப்பு இது சம்பந்தமாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 2012 ஆ ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த தலைமை நிதிபதி ஸ்ரீபவன், வழக்கு விசாரணைக்கு முன்னர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வது அவசியமென்று தெரிவித்தார்.

இதன்படி சம்பந்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரதியொன்றை எதிர் வரும் 13 ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது.

தொடர்புடைய தலைப்புகள்