கச்சத்தீவு, மன்னார் பகுதிகளில் மலேரியா பரவலை தடுக்க நடவடிக்கை

கச்சத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின்படி அண்மையில் பேசாலை பகுதியில் கிணறொன்றுக்குள் இருந்து சில மலேரியா கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழா காலப்பகுதிக்குள் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள் கலந்துகொள்ளும் காரணத்தினால் அவர்கள் மத்தியில் மலேரியா நோய் சுலபமாக பரவும் அபாயம் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனை தடுப்பதற்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு சுகாதார அமைச்சு மன்னார் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் நாடளாவிய ரீதியில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளாதாக மலேரியா தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர். எச்.டி.பி. ஹேரத் தெரிவித்தார்.

இலங்கை, மலேரியா நோய் முற்றாக தடுக்கப்பட்ட நாடாக உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்