இலங்கை கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்கள் சார்ந்த சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் என்ற மகுடத்திலான 2வது பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ''எழுக தமிழ்' முதலாவது பேரணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள பகுதியில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்வதற்காக பெண்கள் , அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள் உட்பட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தந்திருந்தனர்..

எழுக தமிழ் என்ற மகுடத்திலான இந்த பேரணியில் '' வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தேசம் , தமிழ் பேசும் மக்களின் தனித்துவம் , இறைமை , சுய நிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமஷ்டி முறையிலான கூட்டாட்சி '' என்ற கோரிக்கை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷையாக முன் வைக்கப்பட்டிருந்தது.

''உள் நாட்டு போரின்போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும்'', ''வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இனப்பரவலை மாற்றியமைக்கும் சட்ட விரோத குடியேற்றங்கள் மற்றும் தமிழர் பிரதேசங்களை சிங்கள பௌத்த மயமாக்கும் செயல்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்'', ''காணாமல் ஆக்கப்பட்டோரையும் அதற்கு பொறுப்பானவர்களையும் கண்டறிவதை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்'' போன்ற கோரிக்கைகள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களினால் வலியுறுத்தப்பட்டிருந்தன.

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, போர் விதவைகள் , முன்னாள் போராளிகள் வாழ்வாதரத்தை மேம்படுத்தல் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தல் , காணிகளை இழந்தவர்களின் காணிகளை மீளக் கையளித்தல் உட்பட இன்னும் சில கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் கல்லடி மணிக் கூண்டு கோபுர சந்தியிலிருந்து நாவற்குடா விவேகானந்தர் மைதானம் வரை நடைபெற்ற பேரணியின் பின்னர் எழுக தமிழ் பிரகடன உரையை தமிழ் பேரவை தலைவர்களில் ஒருவரான வட மாகாண முதலமைச்சரான சி.வி விக்னேஸ்வரன் நிகழ்த்தினார்.

முஸ்லிம்களுக்கு சமஷ்டி அதிகார அலகு, உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் தற்போதுள்ள நிலையிலிருந்து ஒரு சிறிய முன்னேற்றத்தையும் எட்டும் என எதிர்பார்க்க முடியாது என தமிழ் மக்கள் பேரவையின் தலைவரான சி.வி விக்னேஸ்வரன் கூறினார்.

தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்திய முஸ்லிம்களை தங்கள் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

தமிழ் பேசும் மக்களுக்கு ஒரே அரசியல் தீர்வாக விளங்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பை வலியுறுத்தும் இவ்வேளையில் அதில் முஸ்லிம்களுக்கும் சமஷ்டி வடிவிலான அதிகார அலகு கிடைக்க வேண்டுமென்பதில் தமிழ் மக்கள் பேரவை உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் , ஈ.பி .ஆர் .எல் எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.