மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ முகாமுக்கு அருகில் அகழ்வுப் பணிகள் தொடக்கம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கட்டான்சேனை ராணுவ முகாமுக்குஅண்மித்த காணியில் மனித எச்சங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின.

சட்ட மருத்துவ அதிகாரிகள் உட்பட உரிய துறைசார் அதிகாரிகள் இந்த அகழ்வுப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதவான் எம் .ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணி நாளை செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் காணி உரிமையாளரால் காணியில் கட்டிட நிர்மாணத்தின் நிமித்தம் குழி வெட்டிய வேளை, மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் அங்கு காணப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அதே மாதம் 29ம் திகதி முதல் அகழ்வுப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதஸாவிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் 1989ம் ஆண்டு கைச்சாத்தான போர் நிறுத்த உடன்படிக்கை 1990ம் ஆண்டு நடுப்பகுதியில் முறிவடைந்தது.

அதே காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது முறக்கட்டான்சேனை ராணுவ முகாம் அமைக்கப்பட்டது .

அரசாங்க பள்ளிக்கூட வளாகத்துக்கே அருகே உள்ள தனியார் காணிகளையும் உள்ளடக்கியதாக இந்த ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் ராணுவ பாவனையிலிருந்த தனியார் காணிகள் போருக்கு பின்னர் 2014ம் ஆண்டு ஜுலை மாதம் உரிமையாளர்களிடம் மீளக்கையளிக்கப்பட்டு அக்காணிகளில் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

காணி உரிமையாளரொருவர் தனது வீட்டுக்கான கழிப்பறை குழி வெட்டிய வேளை மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் குறித்த தடயங்கள் தென்பட்டதாக கூறப்படுகின்றது

போர்க் காலத்தில் அந்த பகுதியிலும் அண்மித்த பகுதியிலும் ராணுவத்தினரால் குறித்த முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களுடைய மனித எச்சங்களாக இவை இருக்கலாம் என சந்தேகங்கள் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளன. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்