இலங்கை: மூன்றாவது வாரமாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

இலங்கையில் மத்திய மற்றும் மாகாண அரசுகளிடம், தங்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கக் கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று திங்கட்கிழமை மூன்றாவது வாரமாக தொடர்கிறது.

Image caption மூன்றாவது வாரமாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

தங்களின் போராட்டம் மூன்றாவது வாரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகளின் கவன ஈர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றது.

இந்தப் போராட்டம் தொடர்பாக அதிகாரத்திலுள்ளவர்களிடமிருந்து இதுவரையில் சாதகமான பதில்கள் கிடைக்காத நிலையில், இந்த போராட்டம் தொடர்வதாக பட்டதாரிகளினால் கவலையும், விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் கனாரணமாக சுமார் 30 ஆயிரம் பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக கூறப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 5000 பட்டதாரிகள் 4 வருடங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பு இன்றி இருப்பதாக வேலையில்லாப்பட்டதாரிகள் சங்கம் கூறுகின்றது.

சத்தியாகிரக போராட்டம்

மத்திய மற்றும் மாகாண அரசு துறைகளில் போட்டிப் பரீட்சை இன்றி தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரதான கோரிக்கையாக இந்த சத்தியாகிரக போராட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கான வயது எல்லை 36 ஆகும். வயது எல்லை 45 என அதிகரிக்கப்பட வேண்டும், ஏற்கனவே, அரசு துறைகளில் தொழில் புரிபவர்கள் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகளின் போது உள் வாங்கப்படக் கூடாது, பட்டதாரி சான்றிதழ் பெற்ற தேதியை கருத்தில் கொண்டு மூப்பு அடிப்படையில் தொழில் வாய்ப்பு கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் .ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு , காரைதீவு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனிடையே கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அரசு துறையிலுள்ள வெற்றிடங்கள் மூலம் தொழில் வழங்க தயாராகவிருப்பதாக கிழக்கு மாகாண சபை கூறுகின்றது.

இதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கோரப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தெரிவிக்கின்றார்.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பாக கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் நாளை செவ்வாய்கிழமை ஆராயும் கூட்டமொன்று நடைபெறுகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள் வாங்குவது தொடர்பாக ஆராய்யப்படவுள்ள இந்த கூட்டத்திற்கு மாகாண ஆளுநர் , முதலமைச்சர் , கல்வி அமைச்சர் , முதன்மை செயலாளர் உட்பட கலவித்துறைசார் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்