திருகோணமலை: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சம்பந்தன் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்

  • 19 மார்ச் 2017

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

Image caption காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சம்பந்தனின் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 தினங்களாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், ஞாயிறன்று மாலை அங்கிருந்து அகன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைரின் இல்லத்தின் முன்னே திரண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்றும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், 15 நாட்களாக கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனை முன்பும், தற்போது எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சம்பந்தன் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரின் வருகையை எதிர்பார்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காத்திருக்கின்றனர்.

Image caption சம்பந்தனின் இல்லம் முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரார்கள்

இது தொடர்பாக கருத்து தெரிவிந்த திருகோணமலை பிரதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஆஷா கூறுகையில். எதிர்க்கட்சித் தலைவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்