இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுள்ள தாயின் பிள்ளைக்கு கல்வி மறுப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான தாயின் பிள்ளைக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பிள்ளையின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கம்பகா மாவட்டம் கணேமுல்ல பிரதேசத்திலுள்ள அரச பள்ளிக் கூடமொன்றில் ஆரம்ப கல்வி கற்கும் மாணவியொருவருக்கே கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் இரண்டாவது பிரசவத்தின் பின்னரே எச்.ஐ.வி தொற்று நோயாளி என இனம் காணப்பட்டுள்ளார்.

பள்ளிக் கூடத்திற்கு தாங்கள் அழைக்கப்பட்டு மாணவியை வேறு பள்ளிக் கூடத்திற்கு மாற்றம் செய்யுமாறு அதிபர் மற்றும் துணை அதிபரால் கேட்கப்பட்டதாக மாணவியின் பாதுகாவலர்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது. .

மாணவி ஆரோக்கியமாக காணப்படுகின்றார்.அவருக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை அவரை நாங்கள் படிப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட போதிலும் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக மாணவியின் பாதுகாவலர்கள்' தெரிவிக்கின்றனர். .

வேறு பள்ளிக் கூடத்திற்கு மாற்றம் செய்தாலும் இதே பிரச்சினை வரும் என்பதால் பள்ளிக் கூடத்தை விட்டு விலகுவதற்கான காரணத்தை குறிப்பிட்டு விலகல் பத்திரம் தருமாறு கேட்ட வேளை அதற்கு பள்ளிக் கூட நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

இது தொடர்பாக மத்திய கல்வி இராஜங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது '' இது தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.குறித்த பள்ளிக் கூடம் மாகாண சபையின் நிர்வாகத்திற்குரிய பள்ளிக் கூடமாக இருக்கலாம் '' என்கின்றார்.

''மாணவியின் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவிக்கும் பட்சத்தில் கவனம் செலுத்தப்படும்'' என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த வருடம் முற்பகுதியில் இது போன்ற பிரச்சினை குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள அரச பள்ளிக் கூடமொன்றிலும் இடம் பெற்றிருந்தது.

மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேரடியாக தலையீடு செய்து பாதிக்கப்பட்ட மாணவனுக்கு கண்டி மாவட்டத்திலுள்ள முன்னணி பள்ளிக் கூடமொன்றில் கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்திய கல்வி இராஜங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் இது தொடர்பான அறிவுறுத்தல் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.அவசியம் ஏற்பட்டால் மீண்டும் அதனை நினைவுபடுத்தி சுற்றறிக்கை வெளியிடப்படுமென்றும் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்