கந்தூரி உணவு நஞ்சான சம்பவம்: 100-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை

இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞ்சான சம்பவத்தில் நோயுற்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்துஅரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Image caption மத்திய அமைச்சர் ரிஷாத் பதியூதின் அந்த பகுதிக்கு விரைந்தார்

மூன்று பேர் பலி

இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் நெய் கலந்த சமைத்த உணவு உட்கொண்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் நோயுற்றனர். இரு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

நோயுற்றவர்கள் என இனம் காணப்பட்ட சுமார் 950 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்தும் வெளி நோயாளர் பிரிவுகளிலும் சிகிச்சை பெற்றுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம. நசீர் கூறுகின்றார்.

''நேற்று வெள்ளிக்கிழமை வரை 525 வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதாகவும் அந்த எண்ணிக்கை இன்று சனிக்கிழமை 465 ஆக காணப்படுகின்றது" என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

அதிகாரிகளுடன் முதல்வர் சிறப்பு கூட்டம்

இதே வேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் இன்று சனிக்கிழமை இறக்காமம் வைத்தியசாலைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

Image caption முதலமைச்சர் வைத்தியசாலையில் நோயுற்றவர்களை பார்வையிட்டார்

கல்முனை மாநகர மண்டபத்தில் இந்த அனர்த்தம் குறித்து ஆராயும் வகையில் அதிகாரிகள் மட்டத்திலான சிறப்புக்கூட்டமொன்றையும் அவர் நடத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார்.

இந்த கூட்டத்தில் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் , மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன் உட்பட சுகாதார சேவைகள் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

புலனாய்வு விசாரணை வேண்டும்

உணவு நச்சுத் தன்மை அடைந்த சம்பவம் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக புலனாய்வு விசாரணை நடைபெற வேண்டும் என கிழக்கு துணை போலீஸ் மா அதிபரை முதலமைச்சர் கேட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

Image caption சம்பவம் தொடர்பாக புலனாய்வு விசாரனை தேவை என்கின்றார் முதலமைச்சர்

''உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாகாண ஆளுநர் நிதி மூலம் இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது '' என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

நோயுற்ற ஏனையவர்களுக்கு அனர்த்த நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் தொடர்புகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பார்.

அறிக்கை தாக்கல் செய்ய தீர்மானம்

அதற்கு முன்னதாக சம்பவம் பற்றிய முழுமையான அறிக்கையை இன்னும் ஓரிரு நாட்களில் மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் முன் வைக்க வேண்டும் என்ற மற்றுமோர் தீர்மானமும் எடுக்கப்பட்டு இது தொடர்பான பணிப்புரை மாகாண சுகாதார சேவைகள் இயக்குநருக்கு விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஏ. எல்.எம் . நசீர் குறிப்பிடுகின்றார்.

Image caption குழந்தைகள் உட்பட 950 பேர் நோயுற்றதாக இனம் காணப்பட்டனர்

இறக்காமம் பிரதேசத்திற்கு விரைந்த மத்திய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதின், வைத்தியசாலையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு வைத்திய அதிகாரிகளுடனும் கலந்துரையாடி தேவைகள் குறிந்து கேட்டறிந்து கொண்டார்.

உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்றிருந்த அமைச்சர் அவர்களின் உறவினர்களை சந்தித்து தனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்