இலங்கை : மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஓதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம்

இலங்கையில் மாகாண சபை தேர்தல்களில் பெண்களுக்கு 30 சதவீத இட ஓதுக்கீடு வழங்கும் வகையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

1988ம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள இந்த சட்டத் திருத்தத்தை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி (ஹெசட்) அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் மொத்த வேட்பாளர்களில் குறைந்தது 30 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையேல் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என அந்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மொத்த வாக்காளர்களில் 51 -52 சதவீதம் பெண்களாக இருக்கின்ற போதிலும் அரசியலில் ஈடுபாடு மற்றும் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக அவர்களில் பலரும் ஆர்வம் கொள்வதில்லை.

அரசியலில் ஈடுபடவும் மற்றும் தேர்தலில் போட்டியிடவும் பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை அரசியல் கட்சிகள் வழங்க முன்வருவதில்லை. ஆண்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

இதன் பின்புலத்திலே நாடாளுமன்றத்தில் தற்போது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 5 சதவீதமாகவும் 9 மாகாண சபைகளிலும் 4 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

உள்ளுராட்சி சபைகளை பொறுத்தவரை இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளின்படி 2 சதவீதமான பெண்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.

மொத்த வாக்காளர்களில் 51-52 சதவீதமான பெண்களுக்கு அவர்களின் விகிதாசாரத்திற்கேற்ப தேர்தல்களில் போட்டியிட இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பெண்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளினால் தொடர்ந்து குரல் எழுப்பப்படுகின்றது.

கடந்த வருடம் மார்ச் மாதம் உள்ளுராட்சி சபைகள் தேர்தல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் கீழ் உள்ளுராட்சி சபை தேர்தல்களில் பெண்களுக்கு 25 சதவீத இடஓதுக்கீடு கிடைத்துள்ளது.

இந்த சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் கிழக்கு , சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் குறித்த சட்டதிருத்தத்தின்படி தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்