இலங்கை மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு - நிறைவேறியது சட்டம்

இலங்கையின் மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Image caption இலங்கை மக்கள் தொகையில் 52 சதவீதம் பெண்கள்

'1988ம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில்' கொண்டுவரப்பட்ட திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இலங்கை நாடாளுமன்றம் புதன்கிழமை இரவு நிறைவேற்றியது.

உள்ளுராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 சத வீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் உள்ளுராட்சி சபைகள் தேர்தல் சட்டம் அண்மையில்தான் நிறைவேற்றப்பட்டது.

சட்டத் திருத்தத்தை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாகடந்த ஜுலை மாதம் 26ம் திகதி நாடாளுமன்றத்தில் முன் வைத்திருந்தார். புதன்கிழமை இது விவாதத்துக்கு வந்தபோது, தேர்தல் மறை மாற்றம் தொடர்பாகவும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. இதற்கு கூட்டு எதிரணி பலமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

கலப்பு முறைத் தேர்தல்

இந்த திருத்த சட்டத்தில் தற்போதைய விகிதாசார தேர்தல் முறைக்கு பதிலாக தொகுதி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவம் கொண்ட கலப்பு முறையிலான தேர்தல் முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொகுதி-60 ,விகிதாசாரம்-40 என ஏற்கனவே முன் வைக்கப்பட்ட அந்த திருத்தம் ஆளும் தரப்பில் அங்கம் பெற்றுள்ள சிறுபான்மை இன கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே 50க்கு 50 என திருத்தப்பட்டதாக கூறுகின்றார் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன்.

Image caption அமைச்சர் மனோ கணேசன்

இந்த திருத்த சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என சட்ட மா அதிபர் சபாநாயகருக்கு தெரிவித்திருந்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகள் இறுதி நேரத்தில் வழங்கிய ஆதரவு காரணமாகவே இத் திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தது.

சட்ட வரைவில் ஏற்கனவே காணப்பட்ட சில விடயங்கள் சிறுபான்மை இனங்களுக்குப் பாதிப்பாக இருந்ததாகவும் அவை திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் 'பிபிசி தமிழிடம்' தெரிவித்தார்.

"தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணய குழுவில் சகல இனப் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் . குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் 2/3 பெருன்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிரதமர் தலைமையில் 5 பேர் கொண்ட மீளாய்வுக் குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும். சகல இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் குழு உறுப்பினரை சபாநாயகர் நியமிப்பார்.

ஒரு தொகுதியின் எல்லையை நிர்ணயம் செய்யும் போது சிறுபான்மை இனங்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பல் தொகுதி முறை ஏற்படுத்தப்பட வேண்டும். சிறிய சனத் தொகை கொண்ட தொகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது போன்றவை முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்ட சில திருத்தங்கள்" என்று அவர் தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலைமையை உணர்ந்த அரசு, சிறுபான்மைக் கட்சிகளின் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் தேவையான பெரும்பான்மையுடன் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது.

Image caption வடக்கு மாகாண சபை உறுப்பினரான அமைச்சர் அனந்தி சசிதரன்

தொகுதி வாரியாக 50 சத வீதமும் விகிதாசார முறையில் 50 சத வீதமும் என மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வகையில் அந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் தொகையில் பெண்கள் அதிகம்

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 52 சத வீதமானோர் பெண்களாவர். வாக்காளர் தொகையிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் என கூறப்படுகின்றது. தொழில் துறைகளிலும் ஆண்களை விட முன்னனிலையில் உள்ளனர்.

ஆனால் அரசியலில் அவர்களால் தங்கள் விகிதாசாரத்திற்கேற்ப இடத்தை எட்டுவதற்கு இலங்கை அரசியலில் அதற்கான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் 6 சத வீதமாகவும் மாகாண சபைகளில் 4 வீதமாகவும் பெண்களின் பிரதிநிதித்துவம் தற்போது உள்ளது. ஏற்கனவே உள்ளுராட்சி சபைகளில் 2 சத வீதமான பெண்களே இடம் பெற்றிருந்தார்கள்.

குறிப்பாக வட மாகாண சபையில் உள்ள 39 உறுப்பினர்களில் ஒருவர் மட்டும் தான் பெண் உறுப்பினர். அது போன்று கிழக்கு மாகாண சபையில் 37 உறுப்பினர்களில் தற்போதுள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகும்.

Image caption கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அமைச்சர் ஆரியவதி கலப்பதி

தேர்தல்களில் பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு முன் வருவ தில்லை என கூறப்பட்டாலும் பெண்களிடம் அதற்கான ஆர்வம் இல்லாத தன்மையும் இதற்கு காரணமாக முன் வைக்கப்படுகின்றது.

தேர்தல்களில் போட்டியிட பெண்களுக்கு வீத இட ஓதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பெண்கள் உரிமைகளுக்கான அமைப்புகளும் குரல் எழுப்புகின்றன.

மாகாண சபைகளில் 30 சதவீதமும் உள்ளுராட்சி சபைகளில் 25 சத வீதமும் என கிடைத்துள்ள இட ஒதுக்கீடு பெண்களின் விகிதத்தைவிடக் குறைந்ததுதான். ஆனால், அவர்களின் அரசியல் ஈடுபாட்டிற்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்திற்கும் ஒரு வகையில் ஊக்குவிப்பாகவே இது அமையும்.

கட்சி அல்லது சுயேட்சைக்குழு வினால் தாக்கல் செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் மொத்த வேட்பாளர்களில் ஆகக் குறைந்தது 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இந்த சட்ட திருத்தம் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்