இலங்கையில் மண்சரிவு அபாய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள்!

இலங்கையில் மண்சரிவு அபாயத்தில் மக்கள்! படத்தின் காப்புரிமை Getty Images

பதுளை மாவட்டத்தில் வசிக்கும் 29,160  குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் ஆபத்தான பிரதேசங்களில் வசித்து வருவதாக தேசிய கட்டிட ஆய்வு நிலையம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

அந்த நிலையம் விடுத்துள்ள அறிவித்தலின் படி பதுளை மாவட்டத்தில்  மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்கள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவெள மற்றும் எல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த அபாயம் காணப்படும் பிரதேசத்திற்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைய தேவை இல்லை என்று கூறியுள்ள அந்த அமைப்பு தனது நிலையத்தினால் வழங்கப்படும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அணுகுவதன் மூலம் விபத்துக்களை தடுத்துக்கொள்ள முடியுமென்று அறிவித்துள்ளது.

ஆயினும் எதிர் காலத்தில் சம்பந்தப்பட்ட குடும்பங்களை வேறு இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமென்றும் அந்த நிலையம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கேட்டபோது கருத்து தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பா மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று காணிகளை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாக தான் அமைச்சரவை பத்திரமொன்றை சமரப்பித்துள்ளதாக கூறினார்.

இதன்படி மண்சரிவு அபாயம் காணப்படும் மக்களுக்கு விரைவில் காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் ஆபத்துக்களில்  இருந்து தப்பிப்பது தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் ஒத்திகையொன்று இன்று மாலை பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடத்தப்படவுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்