இலங்கை: தரகர் போல நடித்து யானை முத்துக்களை விற்க முயன்றவர் கைது

இலங்கை: யானை முத்துக்களை  விற்க முயன்றவர்  கைது படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் பல கோடி ரூபாய் மதிப்பு உடைய 'கஜமுத்து' எனப்படும் யானை தந்தத்திலிருந்து கிடைக்கும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற 39 வயதான நபரொருவர் வன ஜீவராசிகள் துறையினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் கஜமுத்துக்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்நபரை கைது செய்த போது அவரிடம் இருந்து 8 கஜ முத்துக்களும், புராதன (பண்டைய) காலத்து பாத்திரமொன்றும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

குறித்த நபரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட வனஜீவராசிகள் துறை அதிகாரியொருவர் தன்னை ஒரு தரகராக அறிமுகம் செய்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். 

அந்நபரை கம்பகா மாவட்டம்  மிரிஸ்வத்த என்ற இடத்திற்கு முத்துக்களுடன் வருமாறு குறித்த அதிகாரி அழைத்தார். முத்துக்களின் விலை ரூபாய் 9 கோடி என்று அந்த நபரால் கூறப்பட்டதாகவும்,பேரம் பேசப்பட்டு ரூபா 4  கோடி 50 லட்சத்திற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

முத்துக்களை கொள்வனவு செய்யவிருக்கும் வர்த்தகரை அழைப்பது போன்று அந்த அதிகாரி தொலைபேசி ஊடாக தனது சக அதிகாரிகளை அந்த இடத்திற்கு வாகனத்தில் வருமாறு வரவழைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வன ஜீவராசிகள் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது  அந்த நபர்  தனது காணியில் குழி வெட்டிய போது அந்த பாத்திரமும் முத்துக்களும் கிடைத்தது என தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.

 இந்நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவிருப்பதாக வனஜீவராசிகள் துறை  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்