இந்திய, சீன நிறுவனங்களிடம் விமான நிலையம், துறைமுகம்: இலங்கையில் ஆர்ப்பாட்டம், கண்ணீர்ப்புகை

இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனம் ஒன்றிடமும், மத்தளை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனம் ஒன்றிடமும் குத்தகை அடிப்படையில் கையளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாந்தோட்டை நகரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் செய்து கலைத்துள்ளனர்.

அம்பாந்தோட்டை இந்திய துணைத் தூதர் அலுவலக வீதியில் போடப்பட்டிருந்த போலீஸ் வீதித் தடைகளை அகற்றி முன்னேறிச் சென்ற வேளை அவர்களை கலைப்பதற்கு போலீஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகம் செய்ததாக உள்ளுர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போது அங்கு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் போது 3 போலீஸார் காயமுற்றனர். போலிஸாரால் கலகம் விளைவிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பேர் 26 வரை கைது செய்யப்பட்டுள்ளனர்;

அம்பாந்தோட்டை நகரில் கூட்டு எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ உட்பட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த புதன்கிழமை அம்பாந்தோட்டை நீதிமன்றம் இந்த ஆர்பாட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

அம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் எவ்வித ஆர்பாட்டங்களும் நடத்த கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த உத்தரவின் பிரதி போலீஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் வழங்கப்பட்டிருந்தது.

இந்திய துணை ராஜீய அலுவலகம் மற்றும் மாகம்புர துறைமுக நுழைவாயில் வீதிகளை தடுக்கும் செய்யும் வகையில் ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஆர்பாட்ட ஏற்பாட்டாளர்களான கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஸ மற்றும் டி.வி. சாணக்க ஆகியோரை அந்த உத்தரவில் நீதிமன்றம் பணித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வழமைக்கு மாறாக குறித்த இடங்களை மையப்படுத்தி வீதித் தடைகள் போடப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் கறுப்பு கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பதவிக் காலத்தில் அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் வெளிநாட்டு கடனுதவியுடன் துறைமுகம் ஒன்றும் மாத்தள சர்வதேச விமான நிலையமும் நிர்மாணிக்கப்பட்டன. இந்த துறைமுகம் சில மாதங்களுக்கு முன்பு சீன நிறுவனம் ஒன்றிடம் குத்தகைக்காக கையளிக்கப்பட்டது.

துறைமுகம் மற்றும் விமான நிலைய நிர்மாண பணிகளுக்கு பெறப்பட்ட கடனை மீள செலுத்த வேண்டியிருப்பதாக இந்த தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் எற்கனவே தெரிவித்து வருகின்றது. இது அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறுகின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :