'யாழ் மக்களின் உளவியல் பாதிப்பு'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 ஆகஸ்ட், 2011 - 17:20 ஜிஎம்டி
இலங்கைப் போரில் இடம்பெயர்ந்த மக்கள்(ஆவணப்படம்)

இலங்கையின் போரில் இடம்பெயர்ந்தோர்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீஎஸ்டி எனப்படும் நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் 13 வீதமாகவும், அங்சைட்டி எனப்படும், பதளிப்பு நோய் 48.5 வீதமாகவும், டிப்ரஸ்ஸன் அதாவது மனச்சோர்வு 41.8 வீதமாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.இது உள நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொசோவா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் போருக்குப் பிந்திய மக்களின் உளவியல் நிலைமையுட்ன் ஒப்பு நோக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.யாழ் மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் 68 வீதமானவர்கள், ஆகக்குறைந்தது ஒரு மன நெருக்கீட்டுச் சம்பவத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெருக்கீட்டுச் சம்பவங்களுக்கு இடப்பெயர்வின்போது ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது மூன்று லட்சம் மக்கள் போரினால் இடம்பெயர நேரிட்டது.

இவர்களுக்கு அரசாங்கம் வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமளித்திருந்ததுடன், தனது சுகாதார அமைச்சின் ஊடாக மனநல கொள்கையொன்றை வகுத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தது. இந்தச் செயற்திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த மக்களுக்காக பல சேவைகள் ஆற்றப்பட்டு வந்துள்ளன.

மருத்துவர் கருத்து

உளநல ஆலோசகர்களுக்கான கருத்தரங்கு ஒன்று

உளநல ஆலோசகர்களுக்கான கருத்தரங்கு ஒன்று

அப்போது அங்கு பணியாற்றி வந்த, வவுனியா பொது மருத்துவ மனையின் உளநலப்பிரிவுக்கு பொறுப்பான மருத்துவர் டாக்டர் சிவஞானம் சுதாகரன் இது பற்றிக் கூறுகையில், நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் அப்போது அந்த மக்கள் மத்தியில் உச்ச நிலையில் காணப்பட்டதாகவும், பல்வேறு இழப்புகளுக்கும் குடும்ப உறவினர்களின் பிரிவுகளுக்கும் ஆளாகியிருந்த அவர்கள் அந்த நிலையில் இருந்து மீள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

உளவியல்பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகள் அதிகமாக இருந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் சூழல் அத்தகைய முயற்சிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை என்றும், தற்கொலைக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் அங்கு இல்லாதிருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் டாக்டர் சுதாகரன் சுட்டிக்காட்டினார்.

''மிகமோசமான யுத்தச் சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் வன்னிப்பிரதேசத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். அலையலையாக வந்த இடப்பெயர்வு அத்துடன் கூடிய கஸ்ட நிலைமைகளை அவர்களில் பலர் தாங்கும் திறனுடையவர்களாக இருந்தார்கள்.

தொடர்ச்சியான யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து வந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்'' என்றும் டாக்டர் சுதாகரன் தெரிவித்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.