ததேகூ-அரசு பேச்சுவார்த்தை முடக்கம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஆகஸ்ட், 2011 - 15:53 ஜிஎம்டி
போரில் இடம்பெயர்ந்த தமிழர்கள்

போரினை அடுத்த நல்லிணக்கமாக அரசியல் தீர்வை சர்வதேச சமூகம் வலியுறுத்துகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டை நிலையை எட்டியுள்ளன.

இதுவரை பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்ற நிலையில், அதில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இனிமேல் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருந்தது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவையும் அந்தக் கட்சி விதித்திருந்தது.

இந்த நிலையில் அது குறித்து பதிலறிக்கை வெளியிட்டிருந்த இலங்கை அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பைப் போன்று செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது.

அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகுமானால், தாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடகவே இனிமேல் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என்று, அரசாங்க தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு செயலாளராகச் செயற்பட்ட சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளாகவே பார்க்கப்பட்டு வந்தன.

ஆனால், இதனை ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையாக வர்ணித்துள்ள சஜின் வாஸ் குணவர்த்தன அவர்கள், இந்த இரு கட்சிகளும் யாரினதும் ஏக பிரதிநிதிகள் அல்ல என்பதால், பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் மூலமே, நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து முடிவு காண முடியும் என்றும் கூறியுள்ளார்.

இவை குறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தாம் பேச்சுவார்த்தைகளை முறிக்கவில்லை என்று கூறியிருப்பதுடன், குறித்த கால அளவுக்குள் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி அரசாங்கம் தமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை அடிப்படையிலேயே கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயங்கள் குறித்து பதில் தரப்படும் என்று கூறி அரசாங்கம் காலம் கடத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.