வவுணதீவில் பிரதேசவாசிகள்- படையினர் முறுகல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 ஆகஸ்ட், 2011 - 16:21 ஜிஎம்டி
தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் இலங்கைப் இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினரால் தாக்கப்பட்ட பலர் அடிகாயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று வியாழக் கிழமை ‘க்ரீஸ் பூதங்கள்’ என்கின்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவலை அடுத்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட பீதியால் படையினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

நேற்றிரவு முழுவதும் பிரதேசத்தில் பெரும் பதற்றம் காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாண்டியடி கிராமத்திற்கு அருகிலுள்ள மறைவிடமொன்றில் மோட்டார் சைக்கிளில வந்த இராணுவ சீருடை தரித்தவர்களினால் 4 பேர் இறக்கி விடப்பட்டதை சிலர் கண்டதாக அங்கு பெரும் பீதி பரவியுள்ளது.

இதனையடுத்து, உள்ளுர் மக்களினால் அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டபோது அங்கு வந்த விசேட அதிரடிப் படையினருக்கும் கிராம வாசிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றனர்

ஆண்கள் ,பெண்கள் என பாராமல் பலரும் இதன் போது தடிகளால் தாக்கப்பட்டதாக அடி காயங்களுக்கு உள்ளான மக்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில், பொலிசாரால் கைது செய்யப்பட்ட கிராமவாசிகள் 18 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை நிதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இவர்கள், அடிகாயங்களுக்காக தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரின் கருத்துக்களை பெற முடியவில்லை.

இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியின் பெண்கள் விடுதிக்குள் மர்ம நபர்கள் ஊடுருவியுள்ளதாக எழுந்த சந்தேகத்தையடுத்து அங்கும் பெரும் பீதி பரவியது.

பொலிஸ் மற்றும் இராணுவம் அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அச்ச நிலை காரணமாக மாணவிகள் பலர் விடுதியை விட்டு வெளியேறி வீடுகளுக்கு திரும்பியள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.