ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் இலங்கை மீது விமர்சனம்

ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்
Image caption ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கையில் பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், அங்கு இன்னும் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, அரசின் இந்த நடவடிக்கையால் எந்தவிதப் பலனும் ஏற்படப் போவதில்லையென்று கூறியிருக்கின்றது.

ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை விவகாரம் பேசப்பட இருக்கின்ற நிலையில், அவசரகால சட்ட விதிகளை நீடிக்காது விட்ட அரசின் நடவடிக்கையை சில நாடுகள் சற்று எச்சரிக்கையுடன் வரவேற்றிருந்த பின்னணியிலேயே ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்சின் இந்த விமர்சனம் வந்திருக்கின்றது.

அவசரகால நிலை நீக்கப்பட்டாலும், எவரையும் கைது செய்து தடுத்துவைக்கக் கூடிய விதத்தில் இன்னும் ‘கொடுங்கோலான, துஷ்பிரயோகங்கள் மிக்க’ அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்வதாக நியுயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் அந்த மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

சட்டவிரோத நடவடிக்கை என்று கருதப்படும் ஒருச் செயலைக்காட்டி, எவரையும் கைது செய்து, எவ்விதக் குற்றச்சாட்டுமின்றி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மட்டும் நீதவான் முன்னிலையில் வெறுமனே ஆஜர்படுத்திக்கொண்டே 18 மாதங்களுக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசிற்கு வழங்குவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகின்றது.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்து தருமாறு போராட்டம்

அவசரகால நிலை முடிவுக்கு வரவுள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன் பிபிசிக்கு கருத்துத் தெரிவித்த பதவிக்காலம் முடிந்து செல்லும் சட்ட மா அதிபர், நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை, குறிப்பாக விடுதலைப்புலி சந்தேக நபர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலையை இந்த தீர்மானம் ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த அவர், அவ்வாறான கைதிகள் உண்மையில் விடுவிக்கபட மாட்டார்கள் என்றும் கூறினார்.

ஜனாதிபதிக்கு சிறப்பு அதிகாரங்கள்

இதற்கிடையே, அவசரகால சட்டவிதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைக்கக்கூடிய விதத்தில் புதிய ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்பட்டு, அவை பின்னோக்கி ஆளக்கூடிய விதத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் சுமார் 2000 பேர் வரையில் பல ஆண்டுகளாக எவ்விதக் குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இதேவேளை புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தையும் கடற்படையையும் விமானப்படையையும் ஈடுபடுத்துவதற்கு சிறப்பு அதிகாரங்களைப் பெறுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.