'பயங்கரவாத தடைச் சட்டம்': நவி.பிள்ளை சாடினார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 செப்டம்பர், 2011 - 17:07 ஜிஎம்டி
நவநீதம் பிள்ளை

நவநீதம் பிள்ளை

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 18வது அமர்வில் உரையாற்றிய நவநீதம் பிள்ளை, அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே உரிமைகள் பறிக்கப்படவும் வன்முறைக் கலாசாரம் தலையெடுக்கவும் காரணமாவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை உதாரணத்துக்கு காட்டிய நவிபிள்ளை, அங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ள பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து வகையான சட்டங்கள் பற்றியும் விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்று கடுமையாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இலங்கை மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தின் கொடுமையான பாதிப்புகளுக்கு முகங் கொடுக்க வேண்டியேற்பட்டது என்றாலும், அந்நாட்டில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களின் பதில் நடவடிக்கைகள் சுயாதீனமான நிறுவனங்களின் பணிகளையும் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் மழுங்கடிங்கும் விதத்திலேயே அமைந்ததாகக் நவிபிள்ளை கூறினார்.

இதன்போது, சில அவசரகால ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை சுட்டிக்காட்டிய ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர், இலங்கையில் நடைமுறையிலுள்ள எல்லாவகையான பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் தடுப்புக் காவல்கள் பற்றி விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இலங்கை விளக்கம்

அமைச்சர் மகிந்த சமரசிங்க

அமைச்சர் மகிந்த சமரசிங்க

இதனையிடையே, ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு பதில் கூறிய இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரும் ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் கலந்துகொண்ட இலங்கைக் குழுவின் தலைவருமான மகிந்த சமரசிங்க, இலங்கையில் ஏற்படுகின்ற கள நிலைமை மாற்றங்களுக்கேற்ப தமது நடவடிக்கைளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இப்போது முன்னேற்றமடைந்துள்ள சூழல் அவசரகால ஒழுங்குவிதிகளை முற்றாக நீக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் ஏதேனும் அவசரகால நிலைமை ஏற்பட்டால் அவற்றைக் கையாள்வதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மற்றும் டீஆர்ஓ போன்ற அமைப்புகளை தடை செய்யவும் கைதிகளையும் தடுப்புக் காவலில் இருப்பவர்களையும் தொடர்ந்தும் தடுத்துவைப்பதற்காகவும் சரணடைந்தவர்களின் புனர்வாழ்வுக்காகவும் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஐநா தலைமைச் செயலர் பான்கீ முனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை, இப்போது மனித உரிமைகள் கவுன்சிலுக்கு மாற்றப்படுவதாக தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல், பகலுணவு போசனமொன்றின் போதே தெரியவந்ததாக கூறிய மகிந்த சமரசிங்க, அதனை ஐநாவின் இரட்டை நிலைப்பாடு என்று வர்ணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.