சனிக்கிழமை 3ம் கட்ட உள்ளூராட்சி தேர்தல்

கொழும்பு மாநகர சபை- பிரிட்டிஷ் காலத்தில்
Image caption கொழும்பு மாநகர சபை- பிரிட்டிஷ் காலத்தில்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்- 2011 இன் மூன்றாம் கட்டம் நாளை 8ம் திகதி நடைபெறுகின்றது.

17 மாநகரசபைகள், ஒரு நகர சபை, மற்றும் 5 பிரதேச சபைகள் என மொத்தமாக 23 உள்ளூராட்சி சபைகளுக்கு 420 பேரை தெரிவு செய்வதற்கு 26 அரசியல் கட்சிகள் மற்றும் 104 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 6448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 1,167 வாக்களிப்பு நிலையங்களில் 15 லட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

முன்னதாக, மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் கட்டம் கட்டமாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் இப்போது நடத்தப்படும் மூன்றாவது கட்டத்தில் தான் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கொழும்பு மாநகரசபை தேர்தலும் நாளை நடைபெறுகின்றது.

கொழும்பில் ஆளும் பிரதான சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையிலான அணியும் பிரதான எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஏஜேஎம் முஸம்மில் தலைமையிலான அணியும் போட்டியிடும் இந்த தேர்தலில் தமிழ் கட்சியான மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி இன்னொரு அணியாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டம் கட்டமாக நடத்தப்படும் தேர்தல்களில் அரசு தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பிரசாரங்களிலும் ஏனைய அரசியல் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது என ஆரம்பத்திலிருந்தே குற்றஞ்சாட்டப்பட்டுவந்தது.

தேர்தல் வன்முறைகள், சட்டவிதி மீறல்கள் தொடர்பாக இம்முறை தமக்கு மொத்தமாக கிடைத்துள்ள 136 முறைப்பாடுகளில் 24 முறைப்பாடுகள் அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பானது என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரலின் இயக்குநர் ரோகன ஹெட்டியாரச்சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக இன்னொரு சுயாதீன கண்காணிப்பு நிறுவனமான கஃபே அமைப்பின் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் பிபிசியிடம் கூறினார்.

அரச வாகனங்களும் சொத்துக்களும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் கீர்த்தி தென்னக்கோன் கூறினார்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பில் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.