பாரத லக்ஷ்மன் கொலை: 'விசாரணையில் நம்பிக்கை இல்லை'

ஜாவத்தையில் இறுதி அஞ்சலி நிகழ்வு (கோப்புப் படம்)
Image caption ஜாவத்தையில் இறுதி அஞ்சலி நிகழ்வு (கோப்புப் படம்)

இலங்கையில் கடந்த 8ம் திகதி, தேர்தல் தினத்தன்று சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரனின் மரணம் தொடர்பில் நடத்தப்படு்ம் விசாரணைகள் குறித்து தமது குடும்பம் திருப்தியடையவில்லையென்று அவரது சகோதரி சுவர்ணா குணரத்ன பிபிசியிடம் தெரிவித்தார்.

தலையில் படுகாயமடைந்து இன்னும் சிகிச்சைபெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இந்தக் கொலைச் சம்பவத்தில் ஒரு சந்தேக நபர் அல்லவென்று இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல பிபிசிக்கு அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனின் சகோதரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவே பாரத லக்ஷ்மனை கைத் துப்பாக்கியால் சுட்டதாக, பாரத லக்ஷ்மனின் வாகன சாரதி பொலிசாருக்கு அளித்துள்ள வாக்குமூலம் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், துமிந்த சில்வாவை சந்தேக நபர் அல்லவென அரசின் உயர் அதிகாரி கூறியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சுவர்ணா குணரத்ண கூறினார்.

ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது விசனம்

ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் கூட தமது சகோதரரின் மரணத்திற்காக குடும்பத்துடன் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவிக்கக் கூட முன்வரவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

பாரத லக்ஷ்மனின் பிரேதத்தை அவரது கொலன்னாவை இல்லத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்ல அவரது மனைவி எண்ணியிருந்த போதிலும் அவரது பிரேதம் ஜனாதிபதி வருவதற்கு வசதியாக அருகிலுள்ள ஜாவத்தை இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது சகோதரரின் படுகொலைக்கான முழுப்பொறுப்பையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஏற்க வேண்டுமென்று பாரத லக்ஷ்மனின் சகோதரி பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.

தமது சகோதரரை கொலை செய்யும் முயற்சி நடப்பதால் அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வில்லையென்றும் அவர் கூறினார்.

இதேவேளை, அண்மையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் பேசிய இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனுக்கு அரசு போதுமான பாதுகாப்பு வழங்கியிருந்ததாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.