காணாமல்போன ஜே.வி.பி. ஆர்வலர்கள் தொடர்பில் கவலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 டிசம்பர், 2011 - 14:26 ஜிஎம்டி
லலித் குமார் வீரராஜ்

லலித் குமார் வீரராஜ்

இலங்கையில் கடந்த வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் இருந்து காணாமல் போயிருந்த ஜே.வி.பி. கட்சியைச் சேர்ந்த இரண்டு மனித உரிமைப் பணியாளர்களின் கதி என்ன ஆனது என்று இப்போது வரை தகவல் இல்லை என அந்நாட்டின் சிவில் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் காணாமல் போன ஆட்களின் குடும்பத்தினர் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வந்த லலித் குமார் வீரராஜ், குகன் முருகநாதன் ஆகியோர் கடந்த வெள்ளியன்று காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன ஆட்களின் தாய் தந்தையர், மனைவிமார் உள்ளிட்டோரை வடக்கிலிருந்து கொழும்புக்கு வரவழைத்து, தங்கள் தவிப்பை ஆர்ப்பாட்டம் மூலம் வெளிப்படுத்துவதற்கு இவர்கள் வழிசெய்திருந்தனர்.

கடைசியாக இவர்கள் இப்படியான ஒரு ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது என்றாலும், அதற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பா?

காணாமல்போனோரின் உறவினர்கள் யாழில் நடத்திய ஆர்ப்பாட்டம்

காணாமல்போனோரின் உறவினர்கள் யாழில் நடத்திய ஆர்ப்பாட்டம்

இதற்கு முன்பே கூட லலித் குமார் வீரராஜ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார். தன்னை நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அண்மையில் இவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரசன்னம் மிகவும் அதிகம் என்பதை வைத்துப் பார்க்கும்போது அங்கு இவர்கள் காணாமல் போனார்கள் என்றால் அதில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சம்பந்தம் இருக்கவே செய்யும் என இவ்விருவருடனும் சேர்ந்து செயல்பட்டுவந்த நுவன் போபகே என்பவர் கூறினார்.

ஆனால் பாதுகாப்பு படைகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தனக்கு தகவல் இல்லை என பிபிசியிடம் பேசிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு உதவ இராணுவம் தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

லலித் குமார் வீரராஜும் குகன் முருகநாதனும் எங்கிருக்கிறார்கள் என்று தமக்கு தகவல் இல்லை என்றும் அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் காவல்துறையின்ர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு அரசியலில் இனிமேலும் தலையிட்டால், அரசியலில் இருந்தே காணாமல் போய்விடுவீர்கள் என தனது மகன் லலித் குமார் வீரராஜுக்கு தொலைபேசியில் இனந்தெரியாத நபர்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்ததாக அவரின் தந்தையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்கள் தவிர வேறு ஒன்பது பேரும் கடந்த இரண்டு மாத காலத்தில் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கொழும்பிலும் அதனை அண்டிய இடங்களில் இருந்தும் கடத்தப்பட்டிருந்தனர்.

வெள்ளை வான்

வெள்ளை வான்களுக்குள் குண்டுக்கட்டாக தூக்கிப்போடப்பட்டு இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று சம்பவங்களை நேரில் கண்டவர்களை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் ஆட்கடத்தல் செய்ய பதிவு எண் இல்லாத இந்த வெள்ளை வான்களே பயன்படுத்தப்பட்டிருந்தன.

அண்மையில் கடத்தப்பட்டவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார், ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் கதி என்னானது என்று தெரியவில்லை.

அரசுக்கு ஆதரவான கூலிப் படைகள், போதைமருந்து தொழிலில் உள்ள குற்றக் கும்பல்கள், காசுவாங்கிக்கொண்டு கொலைசெய்பவர்கள் போன்றோர் இந்தக் கடத்தல்களைச் செய்கிறார்கள் என பழிசுமத்துகின்ற அபிப்பிராயங்கள் சண்டே டைம்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து தணிந்திருந்த இப்படியான ஆட்கடத்தல்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனவோ என்ற தோற்றம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.