'இந்திய வீடமைப்பில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும்'

இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது படத்தின் காப்புரிமை bbc
Image caption இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது

இலங்கையின் வட மாகாணத்தில் இருந்து 90களில் வெளியேற்றப்பட்டு, தற்போது மீள்குடியேறிவரும் முஸ்லிம் மக்களுக்கும் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்தியாவின் வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்களும் உள்ளடக்கப்படுவார்கள் என்று தாம் நம்பியிருந்ததாகவும், ஆனால் தற்போது 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெயர்ந்தோருக்கே உதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுவதாலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை அடங்கிய கடிதம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக வன்னிப் பகுதியில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது உள்ளிட்ட சில திட்டங்களை இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இந்தத் திட்டங்களுக்கான பயனாளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பு இலங்கை அரசுடையது என்று இந்தியா கூறிவருகிறது.

இதேவேளை, இந்தியாவால் உறுதியளிக்கப்பட்ட வீட்டு வசதித் திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் பல்வேறு காரணங்களால் மிகவும் தாமதமடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.