சூறாவளியால் பாதிக்கப்பட்ட மனிக்பாம் அகதிகளுக்கு நிவாரணம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 ஏப்ரல், 2012 - 15:41 ஜிஎம்டி
மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் கூடாரங்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் குட்டி சூறாவளி ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கவும், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இருப்பிட வசதிகளை ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தங்களது வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், இருக்க இடமில்லாமல் தவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மனிக்பாம் முகாமுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் தெரிவித்தனர்.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாமிலேயே மாற்றிடம் தருவதற்குப் பதிலாகத் தங்களை தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மனிக்பாம் முகாமில் வீசிய சூறாவளியினால் 1218 வீடுகள் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருக்கின்றது.

இருபது பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மூவாயிரம் பேர் வரையில் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் மனிக்பாம் முகாமில் ஏற்பட்ட அனர்த்தத்தை நேரடியாகப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக அங்கு சென்ற தன்னையும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரியையும் முகாமினுள் செல்வதற்கு அங்குள்ள இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மேலிடத்தில் இருந்து உத்தரவு கிடைக்காத காரணத்தினாலேயே தங்களை முகாமினுள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை என்று அந்த அதிகாரிகள் காரணம் கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.