பொன்சேகா விடுதலையான விதம்: ஜேவிபி அதிருப்தி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 2012 - 16:37 ஜிஎம்டி
கடந்த நாடாளுமன்றத்தில் ஜேவிபி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியில் போட்டியிட்டது

கடந்த நாடாளுமன்றத்தில் ஜேவிபி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியில் போட்டியிட்டது

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தி ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணியில் பங்கெடுத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டிருக்கின்ற விதம் குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற விடுதலை முழுமையாக இருந்தால், ரத்து செய்யப்பட்ட அவரது ஓய்வூதியக் கொடுப்பனவும் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கான சுதந்திரமும் இழக்கப்பட்ட இராணுவ அந்தஸ்துகளும் திரும்பக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலர் விஜித்த ஹேரத் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

விஜித்த ஹேரத் கருத்து

'பொன்சேகா விடுதலைப் பேச்சுக்களில் ஜேவிபிக்கு பங்கில்லை'

பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான எந்தப் பேச்சுவார்த்தையிலும் தாம் பங்கெடுக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி(ஜேவிபி) கூறுகிறது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அப்படியான முழுமையான விடுதலை சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்காத பட்சத்தில் சரத் பொன்சேகாவின் விடுதலையால் அர்த்தமில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கூறுகின்றனர்.

'நாமும் சிறை சென்றோம்'

ஜனாதிபதி தேர்தல் முடிந்த சூழ்நிலையில் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டது முதல் தமது கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்ததாகவும், தாம் உட்பட 13 பேர் அண்மையில் காலியில் நடத்திய போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறிய விஜித்த ஹேரத், தான் இன்னும் நீதிமன்ற பிணையில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொன்சேகாவுக்காக போராட்டம் நடத்தியவர்கள் பலர் பல்வேறு துயரங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலர் சுட்டிக்காட்டினார்.

எனவே சரத் பொன்சேகாவின் கைது விவகாரத்தை அவரது தனிப்பட்ட விவகாரமாகக் கருத முடியாது என்றும் அது பொதுவான அரசியல் பிரச்சனை என்றும் அதனால் நிபந்தனையுடன் கூடிய விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும் மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

நாட்டில் இன்னும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்வதாகவும், ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் வாடுவதாகவும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரை-இராணுவ ஆட்சி நடப்பதாகவும் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியுடன் ஜனநாயக தேசிய முன்னணி (டிஎன்ஏ) நாடாளுமன்ற உறுப்பினர் டிரலான் அலெஸும் அனோமா பொன்சேகாவும் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் மக்கள் விடுதலை முன்னணி எந்தவிதத்திலும் பங்கெடுக்கவில்லை என்றும் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் தாம் தொடர்ந்தும் சரத் பொன்சேகாவின் அரசியல் நடவடிக்கைகளோடு இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது அவரது அரசியல் நிலைப்பாடுகளை பொறுத்தே அமையும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தமிழோசையிடம் கூறியது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.