'அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் விரிவடைகிறது'

'நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் 850 பேர் அளவில் உள்ளனர்': மனோ கணேசன்
Image caption 'நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் 850 பேர் அளவில் உள்ளனர்': மனோ கணேசன்

இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தில் மற்ற தேசியக் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னிலை சோசலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சிவில் அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசிய கட்சிகளுடன் சரத் பொன்சேகா தலைமையிலான கட்சியையும் இணைத்துக்கொண்டு கைதிகள் விவகாரத்தை தேசியப் பிரச்சனையாக முன்னெடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக மனோ கணேசன் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்தது என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, அரசியல் காரணங்களுக்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை அளிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐந்து அம்ச வேலைத்திட்டம்

கைதிகள் விவகாரத்தை ஜநாவின் பொறிமுறைக்குள் கொண்டுசெல்வது, ஏனைய தேசியக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கைதிகள் பிரச்சனையை தேசியப் பிரச்சனையாக அணுகுவது, இலங்கையிலுள்ள சகல வெளிநாட்டு தூதுவர்களிடமும் கைதிகள் விவகாரத்தை கொண்டுசெல்வது, கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் கைதிகளுக்கு சட்ட ரீதியான உதவிகளை அளிப்பது என ஐந்து அம்ச வேலைத்திட்டத்தின் கீழ் தமது நடவடிக்கைகள் அமையும் என்றும் மனோ கணேசன் கூறினார்.

விடுதலைப் புலிச் சந்தேகநபர்களை விசாரிப்பதற்கென தனியான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் அரசின் அண்மைய அறிவிப்பு வெறும் காலத்தைக் கடத்தும் நடவடிக்கை என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இறுதிக்கட்டப் போரில் அரச படைகளிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்குப் புறம்பாக, அதற்கு முன்னைய காலங்களில் இருந்தே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் பல ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் வாடுவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பினர் கூறிவருகின்றனர்.

இவ்வறான கைதிகள் சுமார் 850பேர் கொழும்பு தடுப்புக்காவல் சிறை, கொழும்பு மகசீன் சிறை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, வவுனியா ஆகிய சிறைச்சாலைகள் மற்றும் களுத்துறை பூசா தடுப்புக்கூடம் என நாட்டின் பல பாகங்களிலும் சிறைவைக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.