தமிழ் கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாடு சாத்தியமா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 ஜூலை, 2012 - 17:56 ஜிஎம்டி
'முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து சாதமான அறிகுறிகள் இல்லை'

'முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து சாதமான அறிகுறிகள் இல்லை'

இலங்கையில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக அங்கம் வகித்தாலும் மாகாண சபைத் தேர்தலில் தனித்தா அல்லது கூட்டாகவா போட்டியிடப்போகிறது என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை.

இந்தத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் அண்மைக் காலங்களில் இரண்டு தடவைகள் பேச்சுவார்ததைகள் நடைபெற்றுள்ள போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் தமக்கு கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸு பெரும்பாலான முஸ்லிம்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டக் கட்சி என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

இணைந்த வடக்கு-கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொண்டுள்ள கட்சி என்பதாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமது கட்சி இணக்கப்பாட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பின் கருத்தைப் பெற முயன்ற போதிலும் அது பலனளிக்கவில்லை.

'மு.காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலக வாய்ப்பில்லை'

அதேவேளை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அரசியல் விமர்சகருமான எஸ்.எல்.எம். ஹனீபா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இணக்கப்பாட்டு அரசியல் என்பது மேடைகளில் பேசப்பட்டாலும் அது பலனளிக்கக் கூடியது அல்ல என்கின்றார்.

இரு தரப்பும் இணக்கப்பாட்டு அடிப்படையில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் .ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகி தேர்தலில் போட்டியிடக் கூடிய வாயப்புகள் இல்லை என்பது சாதாரன மக்களுக்கு கூட தெரிந்த விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் தற்போது வகித்து வரும் அமைச்சு பதவிகளையோ அல்லது ஏனைய வசதிகளையோ துறப்பதற்கும் முன் வரமாட்டார்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.