காணாமல்போயிருந்த இளைஞர் கோமா நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஜூலை, 2012 - 17:25 ஜிஎம்டி
காயப்பட்ட தமிழ்க்கைதி ஒருவர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்

காயப்பட்ட தமிழ்க்கைதி ஒருவர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்

இலங்கையின் வடமேற்கே, மன்னார் மாவட்டத்தில் அரச சிறப்பு முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்து, பின்னர் தொடர்புகளின்றி காணாமல்போனதாக கூறப்பட்ட இளைஞர் ஒருவர் கொழும்புக்கு அருகே உள்ள ராகம வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.

மன்னார், இலுப்பக்கடவையைச் சேர்ந்த முத்துராசா டில்ருக்ஷன் (29 வயது) என்ற இளைஞனே வைத்தியசாலையில் கோமா நிலையில் இருக்கிறார்.

2005-ம் ஆண்டில் கட்டாருக்கு வேலைக்குச் சென்றிருந்த இந்த இளைஞன் 2007-ம் ஆண்டில் நாட்டுக்குத் திரும்பியிருந்த நிலையில், பின்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மீண்டும் வெளிநாடு செல்வதற்காக முயன்றபோது அதற்கு புலிகள் அனுமதியளிக்கவில்லை.

அதன்போது, அவர் விடுதலைப் புலிகளுக்குத் தெரியாமல் கடல்வழியாக இலுப்பைக் கடவையிலிருந்து மன்னார் பகுதிக்குச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஒருமாதத்தின் பின்னர், முருங்கன் களிமோட்டை சிறப்பு இராணுவ முகாமில் அவர் இருப்பது தமக்குத் தெரியவந்ததாகவும் சிறிது காலத்தின் பின்னர் அந்தத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அவரது தாயார் பிபிசி தமிழோசையிடம் கூறுகிறார்.

வவுனியா சிறைக்கைதிகள் பலர் தென்னிலங்கை சிறைகளுக்கு மாற்றப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது

வவுனியா சிறைக்கைதிகள் பலர் தென்னிலங்கை சிறைகளுக்கு மாற்றப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது

இதற்கிடையில், வன்னி இறுதி யுத்தத்தில் சிக்கி அவரது குடும்பத்தினர் இடம்பெயர்ந்து மீண்டும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக டில்ருக்ஷன் பற்றிய தகவல்கள் இல்லாமல் இருந்துவந்த நிலையில், இப்போது அவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கைகால்கள் அடித்து வீங்கிய நிலையில், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் கைகால்களில் விலங்குகள் பூட்டப்பட்டிருப்பதாகவும் அவரது தாயார் தமிழோசையிடம் கூறினார்.

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் பின்னர், அங்கிருந்து அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டு மகர மற்றும் கண்டி சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக கடந்த வாரம் தமிழ் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் ராகம வைத்தியசாலையிலும் சிறைச்சாலை வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மகர சிறைச்சாலையில் தாக்கிக் கொல்லப்பட்ட நிமலரூபனின் சடலத்தை இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊரான வவுனியாவுக்கு கொண்டுசெல்ல அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதா இல்லையா என்பது தொடர்பான நீதிமன்ற வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.