நீதவானுக்கு அச்சுறுத்தல்: ஜனாதிபதியின் பணிப்பில் சிஐடி விசாரணை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஜூலை, 2012 - 16:53 ஜிஎம்டி
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நீதித்துறை பணிகள் முடங்கியிருந்தன

சட்டத்தரணிகள் போராட்டத்தால் நாடு முழுவதும் நீதித்துறை பணிகள் முடங்கியிருந்தன

இலங்கையில் மன்னார் நீதவானுக்கு கெபினட் அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையின் சிறப்பு குழுக்கள் விசாரணைகளை நடத்திவருவதாக காவல்துறை பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹண பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் பொலிஸ்மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

நீதவான் ஏற்கனவே வழங்கிய உத்தரவொன்று தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாக மன்னார் நீதவான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதன்படி, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக காவல்துறை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

'நிதித்துறையில் நேரடி அரசியல் தலையீடு'

முன்னைய சந்தர்ப்பங்களிலும் நீதவானுக்கு அமைச்சர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நீதித்துறைச் செயற்பாடுகளில் தலையிட்டிருப்பதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் நீதவானை இடமாற்றுவதற்கான முயற்சிகளிலும் அமைச்சர் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த பின்னணியில், நாட்டின் நீதித்துறையில் அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடுகளைக் கண்டித்து சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளாவிய ரீதியில் நீதித்துறைச் செயற்பாடுகள் முடங்கிப்போயிருந்தன.

இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் உத்தரவு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவை பொலிசார் பெற்றுள்ளதாகவும், அதன்படி ஆரம்பகட்டமாக தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் ஆராயப்பட்டு, அதன்பின்னர் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதியானால், அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட கெபினட் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் சில இடங்களில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.