தமிழ்க் கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தடைப்பட்டுள்ளன படத்தின் காப்புரிமை gosl
Image caption தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தடைப்பட்டுள்ளன

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசு முன்மொழிந்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளதாக கூட்டமைப்பு கூறுகிறது.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதர் அங்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசியபோதே இதை தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அரசியல் தீர்வு பற்றியும் பேசப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வேறு எந்த வகையிலும் தீர்வுத் திட்டத்துக்கான முன்னெடுப்புகளை இலங்கை அரசாங்கம் செய்யாத நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலமாகவாக ஏதாவது தீர்வு வருகிறதா என்று பார்க்கலாம் என்று இந்தியத் தூதர் தெரிவித்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

இலங்கை அரசை இதன்மூலம் இணங்க வைக்க முடியும் என இந்தியா நம்புவதாகவும் இந்தியத் தூதர் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் கூட்டமைப்பும் அரசும் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணைவது குறித்து பரிசீலிக்கலாம் என்கிற தமது நிலைப்பாட்டை அவருக்கு மீண்டும் விளக்கியதாகவும் சுரேஷ் தெரிவித்தார்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தடைபட்டு போயுள்ள நிலையில், அதை மீண்டும் தொடங்குவதற்கு கூட அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் கூட்டமைப்பினர் இந்தியத் தூதரிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்க் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக் குழவுக்கு வர மறுக்கின்றனர் என்றும் அதனாலேயே அரசியல் தீர்வு தாமதமாகிறது என்றும் இலங்கை அரசு சர்வதேச ராஜதந்திரிகள் மட்டத்தில் பிரசாரப்படுத்த முயற்சித்து வருகிறது எனக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ், தமது தரப்பிலும் இது தொடர்பில் ராஜதந்திரிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்றும் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.