'வடக்கில் ஜனநாயகம் இல்லை': அமெரிக்க தூதரிடம் யாழ் ஆயர்

அமெரிக்கத் தூதர்-யாழ் ஆயர்
Image caption அமெரிக்கத் தூதர்-யாழ் ஆயர்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவதாக யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா பூட்டனிஸிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, ஜனநாயக ரீதியாக அவர்கள் தமது மாற்று நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் பலவிதமான முட்டுக்கட்டைகள் இருக்கின்றன என்றும் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக்கூறியதாக யாழ் ஆயர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையில் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஸியா பூட்டனிஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் யாழ் ஆயரைச் சந்தித்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மக்கள் ஜனநாயக ரீதியாக செயற்படுவதற்கு எதிராக கழிவு எண்ணெய் வீசியடிப்பது, ஆட்களைத் தாக்குவது, அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக ஆயர் அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக அமெரிக்கா கூறுகிறது.

எனினும் அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. மாறாக, போருக்குப் பிந்திய அபிவிருத்திச் செயற்பாடுகளில் மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்ற மாயையில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது என்றும் அமெரிக்க தூதுவர் தம்மிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் கூறினார்.

காணி அபகரிப்பு பற்றிய விடயங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ள அமெரிக்க தூதுவர், மீண்டும் சண்டைகள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் அரசாங்கம் இருக்கின்றது, இதனால் இராணுவம் தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருவதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.