'அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை': கோட்டா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜூலை, 2012 - 17:22 ஜிஎம்டி
கோட்டாபய, மகிந்த

'அவசரகால சட்டம் இல்லாமையால் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் முப்படையினரை ஈடுபடுத்த முடியாமல் இருக்கிறது'

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகால சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்துவருவதாகவும் அது தவறு என்றும் கோட்டாபய கூறியுள்ளார்.

குற்றச்செயல்களும் தேசியப் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் இன்று திங்கட்கிழமை காலை அரசின் தகவல் திணைக்களத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் பாதுகாப்புப் படையினரால் எந்தவொரு பாலியல் வன்முறைகளும் புரியப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் கூறினார்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ

'அவசரகால சட்டம் இல்லாதது தான் பிரச்சனை: கோட்டா

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதால் குற்றவாளிகள் சுதந்திரமாக இயங்குவதாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய கூறுகிறார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் உயிரிழந்த பெண்களை படையினரே பாலியல்கொடுமைகளுக்கு உள்ளாக்கி கொன்றதாக வெளிநாட்டவர்களுக்கு தவறாக தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

நாட்டில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு இராணுவத்துக்கு போதிய அதிகாரங்கள் இல்லாமல் இருப்பதாகவும் அதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்ற தொனியிலும் கோட்டாபய ராஜபக்ஷ பேசியிருக்கிறார்.

மர்மமான முறையில் கொலைகள்

இதேவேளை இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டம், கட்டுவன பிரதேசத்தில் இன்று காலையும் ஆணொருவர் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இந்த சடலங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதே கட்டுவன பிரதேசத்தில் தான் கடந்த மாதத்தில் ஜேவிபியினரின் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, அண்மையில் இரத்தினபுரி மாவட்டம் காவத்தைப் பகுதியில் ஒரு தாய் மற்றும் மகளின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இதே பிரதேசத்தில் இதற்கு முன்னரும் இரண்டு வயோதிப பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதற்கு முன்னரும் அப்பகுதியில் பல கொலைச்சம்பவங்கள் மர்மமான முறையில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.