இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் களமும் வன்முறைகளும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 செப்டம்பர், 2012 - 16:05 ஜிஎம்டி
தாக்கப்பட்ட மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில்( படம்- நியூஸ்ஃபெஸ்ட்)

தாக்கப்பட்ட மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் (படம்- நியூஸ்ஃபெஸ்ட்)

இலங்கையில் கலைக்கப்பட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்க இன்னும் ஒருவாரமே இருக்கின்ற நிலையில், அங்கு தேர்தல் சட்ட மீறல்களும் வன்முறைகளும் கடந்த சில தினங்களில் அதிகரித்துவருவதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவான பஃப்ரல் அமைப்பு கூறுகிறது.

அனுராதபுரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் இரண்டு தினங்களுக்கு முன்னர் கடுமையாக தாக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஆளுங்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பேர்ட்டி பிரேமலாலின் ஆதரவாளர்கள் 30 பேர்வரையில், கடந்த வியாழன் இரவு கடமைக்குச் சென்றுகொண்டிருந்த மருத்தவர் ஒருவரை கடுமையாக தாக்கியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென பஃப்ரல் அமைப்பின் இயக்குநர் ரோஹன ஹெட்டிஆரச்சி பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து அனுராதபுரம் வைத்தியசாலை மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் நேற்று வௌ்ளிக்கிழமை முழுவதும் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்றுபேரை பொலிசார் கைது செய்திருந்தாலும் மற்றவர்களும் கைதுசெய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக ரோஹன ஹெட்டிஆரச்சி மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தேர்தல் களம்

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மோதல்கள் ஏற்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு சிறப்பு பொலிஸ்குழுவொன்று தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதுபற்றி தேர்தல்கள் ஆணையாளரும் கண்காணிப்பாளர்களும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறையில் அண்மையில் நடந்த தேர்தல் வன்முறை (கோப்புப் படம்)

அம்பாறையில் அண்மையில் நடந்த தேர்தல் வன்முறை (கோப்புப் படம்)

அதேபோல மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திற்கும் சிறப்பு பொலிஸ் அணி தேவை என்றும் ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆயுதந்தாங்கிய குழுவினர் பகிரங்கமாக நடமாடாவிட்டாலும் அப்படியான ஆயுதக்குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரலாம் என்று மக்கள் மத்தியில் பீதி உள்ளதாகவும் பஃப்ரல் அமைப்பின் இயக்குநர் சுட்டிக்காட்டினார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இதுவரை பதிவாகியுள்ள 180 சம்பவங்களில் 13 தாக்குதல் சம்பவங்களும் 17 அச்சுறுத்தல் சம்பவங்களும் அடங்குகின்றன.

இந்த 17 அச்சுறுத்தல் சம்பவங்களில் கிட்டத்தட்ட எல்லாமே கிழக்கு மாகாணத்திலேயே நடந்திருப்பதாக பஃப்ரல் அமைப்பு கூறுகிறது.

இதுதவிர கட்சி அலுவலகங்களையும் வாகனங்களையும் ஏனைய சொத்துக்களையும் சேதப்படுத்திய சம்பவங்களும் மூன்று மாகாணங்களிலும் பரவலாக நடந்துள்ளன.

தேர்தல் செயலகம் நடவடிக்கை

வடமத்திய மாகாணத்தில் பதிவான 77 சம்பவங்களில் 65 சம்பவங்களும் அனுராதபுரத்திலேயே நடந்திருப்பதாக தேர்தல்கள் செயலகம் கூறுகிறது.

இதேவேளை, அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 21 சிறப்பு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ளதாக துணை தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேபோல கிழக்கு மாகாணத்திலுள்ள முன்று மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இம்முறை தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த பொலிசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் எம்.எம்.மொஹமட் சுட்டிக்காட்டினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.