மன்னார் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டார்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 செப்டம்பர், 2012 - 16:47 ஜிஎம்டி
குற்றவாளிகளை கைதுசெய்யாவிட்டால் காவல்துறைக்கு எதிராக போராட்டம் தொடரும்: சட்டத்தரணிகள்

குற்றவாளிகளை கைதுசெய்யாவிட்டால் காவல்துறைக்கு எதிராக போராட்டம் தொடரும்: சட்டத்தரணிகள்

இலங்கையின் வடமேற்கே மன்னாரில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பப்பட வேண்டும் எனக்கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த அப்பிரதேச சட்டத்தரணிகள் இன்று திங்களன்று தமது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியிருக்கின்றார்கள்.

மன்னார் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி, நீதிமன்றக் கட்டடத்தின் மீதும் கல் எறிந்து சேதங்களை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர்.

கடந்த பல வாரங்களாக சட்டத்தரணிகள் இதற்கான போராட்டத்தை நடத்தி வந்துள்ளார்கள்.

இதனால் மன்னார் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்திருந்தன. பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குத் திரும்பியிருந்ததையடுத்து, மன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.

இந்தப் பணிபுறக்கணிப்பு குறித்து கருத்து வெளியிட்ட மன்னார் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி கயஸ் பெல்டானோ, பொதுமக்களின் நலன்கருதி கடமைக்குத் திரும்புமாறு பல்வேறு தரப்பினராலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தமது போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

எனினும் சட்டத்தரணிகளாகிய தாங்கள் தமது கண்ணால் கண்ட குற்றவாளிகளைக் குறித்த காலத்திற்குள் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தத் தவறினால் மீண்டும் தமது போராட்டம் தொடரும் என கயஸ் பெல்டானோ கூறினார்.

நீதிமன்றத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள், அதற்கான ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமைதாங்கி வழிநடத்தியவர்களைக் குறிப்பிட்டு அடையாளம் காட்டி தெரிவித்திருக்கின்ற போதிலும் அவர்களை பொலிசார் இன்னும் கைது செய்யவில்லை. இந்த நிலைமை தொடருமானால், தமது அடுத்த கட்ட போராட்டம் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய பொலிசாருக்கு எதிராகவே நடத்தப்படும் என்றும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி கயஸ் பெல்டானோ தெரிவித்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.