மாகாணசபைத் தேர்தல்களில் 50 வீதமான வாக்குகளே பதிவாகின!

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 செப்டம்பர், 2012 - 09:46 ஜிஎம்டி
வாக்களிக்க வந்த பெண்கள்

வாக்களிக்க வந்த பெண்கள்

இலங்கையில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல்களில் கிட்டத்தட்ட 50 வீதமான வாக்குகளே பதிவாகியுள்ளன.

கிழக்கு, சபரகமுவை மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான தேர்தல்களில் 7 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 33 லட்சத்து 36ஆயிரம்பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தார்கள்.

ஆனால், கடந்த தேர்தல் காலங்களுடன் ஒப்பிடும்போது நீண்ட காலத்துக்குப் பின்னர் குறைந்தளவான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

மூன்று மாகாணங்களிலும் பரவலாக நடந்துள்ள சில வன்முறைகளுக்கு மத்தியிலும் ஓரளவு சுமுகமாக வாக்குப்பதிவுகள் நடந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மக்கள் மத்தியில் தேர்தல் மற்றும் வாக்களிப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி போக்கும் அக்கறையின்மையும் வாக்குப்பதிவு வீதம் குறையக் காரணம் என்று கூறினாலும் பாரதூரமான அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் நிலவியமையும் முக்கிய காரணம் என்று கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகக்கூடுதலான சம்பவங்களாக 26 அசம்பாவிதங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக அம்பாறை மாவட்டத்தில் தான் 19 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மூன்று மாகாணங்களிலும் தேர்தல் தினத்தன்று மட்டும் 121 அசம்பாவிதங்கள் கஃபே அமைப்பிடம் பதிவாகியிருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் சில தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், கள்ளவாக்கு முயற்சிகள் என பரவலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதையும் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேர்தல் கண்காணிப்பாளர் கருத்து

கண்காணிப்பாளர் பார்வையில் மாகாணசபைத் தேர்தல்

மாகாணசபை தேர்தல் வாக்குப்பதிவு பற்றி கஃபே அமைப்பு

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பொலனறுவை மாவட்டத்தின் பலபகுதிகளில் வாக்குச்சாவடிகளை அண்மித்த பகுதிகளில் ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள், பதாதைகள் தேர்தல் தினத்தன்றும் நீக்கப்படாமல் இருந்ததாகவும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ தலைமையிலான குழுவினர் ஆயுதங்களுடன் இன்று நடமாடியதாகவும் கண்காணிப்பாளர்களிடம் முறையிடப்பட்டிருக்கிறது.

அதேபோன்று அரசாங்க அமைச்சரொருவருடன் சென்ற ஆதரவாளர்கள் சிலர் அம்பாறை தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களை அச்சுறுத்தி அவர்களை வாக்களிக்காமல் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தி அவர்களை வாக்குப்போடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் நடந்துள்ளதாகவும் கஃபே அமைப்பின் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்,முஸ்லிம் பிரதேசங்களில் அதிக அசம்பாவிதங்கள்

தேர்தல் வன்முறையில் எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று

கிழக்கில் தேர்தல் வன்முறையில் எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று

இதேவேளை, மூன்று மாகாணங்களையும் ஒப்பிடும்போது தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளிலேயே தேர்தல் சட்டவிதி மீறல்களும் முறைகேடுகளும் நடந்தமைக்கான முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், கிழக்கில் மட்டுமன்றி சபரகமுவை மாகாணத்திலும் தோட்டத்தொழிலாளர்கள் செறிந்துவாழும் பகுதிகளிலும் இந்த அசம்பாவிதங்களை அவதானிக்க முடிந்ததாகவும் கஃபே அமைப்பின் இயக்குநர் கூறினார்.

திருகோணமலையில் சம்பூரில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் பலருக்கு அடையாள அட்டைப் பிரச்சனை காரணமாக வாக்களிக்க முடியாமல்போனதாகவும் அவர் மேலும் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்தில் 35 பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று தனித்தனியாக போட்டியிடும் சிறுபான்மை சமூகங்களின் இரண்டு பிரதான கட்சிகளுடன் ஆளுங்கட்சியுடன் கூட்டுசேர்ந்திருக்கின்ற தமிழ் முஸ்லிம் கட்சிகளும் நேரடிப் போட்டியில் ஈடுபட்டிருந்தன.

அடுத்தபடியாக, மலையகத்தில் கணிசமான தமிழ் வாக்குகளையும் வைத்திருக்கின்ற இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை உள்ளடக்கிய சபரகமுவை மாகாண சபையில் எப்படியாவது தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றை வென்றெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் எதிரணியிலுள்ள மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியுடன் அரசாங்கத்தின் பங்காளியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தமை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 20 ஆசனங்களையும் , ஐக்கிய தேசிய முன்னணி 15 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை உள்ளடக்கிய சபரகமுவை மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணி 25 , ஐக்கிய தேசியக் கட்சி 17 , மக்கள் விடுதலை முன்னனி 2 என்ற எண்ணிக்கையில் ஆசனங்களைப் பெற்றிருந்தன.

பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வட-மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 20, ஐக்கிய தேசியக் கட்சி 12 , மக்கள் விடுதலை முன்னணி 1 என ஆசனங்களை பெற்றிருந்தன.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.