இரண்டு மாகாணங்களில் ஆளுங்கட்சி ஆட்சி; கிழக்கில் பெரும்பான்மை இல்லை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 செப்டம்பர், 2012 - 10:29 ஜிஎம்டி
கிழக்கில் எதிரணிகள் பெரும்பான்மை

கிழக்கில் எதிரணிகள் பெரும்பான்மை

இலங்கையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மூன்று சபைகளிலும் கூடுதல் ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

சபரகமுவை மற்றும் வடமத்திய மாகாணசபைகளில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்மை பலத்தை ஆளுங்கட்சி பெற்றுள்ளபோதிலும் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிக்குப் போதுமான பலத்தை அக்கட்சியால் பெறமுடியவில்லை.

35 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12 ஆசனங்களை மாவட்டங்கள் ரீதியாக பெற்றுள்ளது.

மாகாண மட்டத்தில் கூடுதல் வாக்குகளை பெற்ற கட்சி என்ற ரீதியில் 2 போனஸ் ஆசனங்கள் அடங்கலாக மொத்தம் 14 ஆசனங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளது. இதனிடையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியால் 4 ஆசனங்களையே பெறமுடிந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட, மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் பங்காளிக் கட்சியான விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னனி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.

கிழக்கில் 2008 ம் ஆண்டு நடந்த தேர்தலின் முடிவுகள்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 20 ,ஐக்கிய தேசிய கட்சி - 13 ,மக்கள் விடுதலை முன்னனி - 1 ,தமிழ் ஜனநாயக தேசிய முன்னனி -1 என்ற எண்ணிக்கையில் ஆசனங்களை பெற்றிருந்தன.

அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சபரகமுவையில் 2 தமிழ் பிரதிநிதிகள்

இதேவேளை சபரகமுவை மாகாணத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட்டுள்ளமை சிறப்பு அம்சமாகும்.

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய சபரகமுவை மாகாண தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 28 ஆசனங்களையும் ,ஐக்கிய தேசிய கட்சி - 14 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இம் மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக போட்டியிட்ட மலையக தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, வடமத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி - 21,ஐக்கிய தேசிய கட்சி - 11,மக்கள் விடுதலை முன்னனி - 1 என ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.