காலங்கடக்கிறது; எல்எல்ஆர்சி பரிந்துரைகளை அமல்படுத்துக!

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 செப்டம்பர், 2012 - 17:00 ஜிஎம்டி
ராபர்ட் பிளேக்

ராபர்ட் பிளேக்

இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய காலகெடுவுக்குள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கவலையளிப்பதாகவும் இது ஐநா மன்றத்தின் மார்ச் மாதக் கூட்டத்தின்போது எதிரொலிக்கலாம் என்றும் அமெரிக்க உயர் இராஜதந்திர அதிகாரி ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவத்தின் இருப்பைக் குறைக்க வேண்டும், காணாமல்போனோர் சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் தேவை மற்றும் போர்முடிந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், மோதல் காலத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைத்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்றும் கோரியிருக்கின்ற ராபர்ட் பிளேக், மாகாணங்களுக்கு கூடுதலான அதிகாரங்களை அளிப்பது தொடர்பில் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாக மீண்டும் துவங்கப்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறது என்பது தொடர்பில் பல கேள்விகள் இருக்கின்றன என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை அரசு இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வடக்கு மாகாண தேர்தலை தாமதமின்றி நடத்துக!

வடபகுதி மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிசெய்வது என்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதின் முக்கிய அம்சம் என்று தான் நம்புவதாகக் கூறிய பிளேக், விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டபோது தான் இலங்கையில் இருந்ததை நினைவுகூர்ந்ததுடன் கிழக்கு மீட்கப்பட்டு ஓராண்டுக்குள் மாகாண தேர்தல் நடந்தது போல வடக்கிலும் மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலாவது தேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரினார்.

அரசாங்கம் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு செப்டம்பரில் வடக்கு மாகாண தேர்தலை நடத்துவதைவிட, அதற்கு முன்னதாகவே நடத்தி ஜனநாயக உரிமைகளை வடக்கு மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க உயர் இராஜதந்திரி பிளேக் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அரச தரப்பின் உயர் அதிகாரிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தவர்களையும் இந்த விஜயத்தின்போது அவர் சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.