திருப்பி அனுப்பபடவிருந்த பலர் கடைசி நேரத் தடையுத்தரவு பெற்றனர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 செப்டம்பர், 2012 - 08:50 ஜிஎம்டி
60 பேரில் 25 பேரே திருப்பி அனுப்பப்பட்டனர்

60 பேரில் 25 பேரே திருப்பி அனுப்பப்பட்டனர்

பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு நேற்று புதன் கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்த 60 பேரில் பலர் கடைசி நேரத்தில் தாம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் கடைசி நேரத் தடை உத்தரவைப் பெற்றிருந்தார்கள்.

திருப்பி அனுப்பப்படவிருந்த 60 பேரையும் ஏற்றிய விமானத்தை தடுத்து நிறுத்துவதற்காக நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை அடுத்தே ஒரு சிலருக்கு மட்டும் இந்தத் தடையுத்தரவு கிடைத்துள்ளது.

தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை ஏற்றிச்செல்லும் விமானத்தை முழுமையாகத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க மறுத்த நீதிபதி, தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தஞ்சம் மறுக்கப்பட்டமைக்கான தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டதாக தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் சார்பில் தடையுத்தரவு கோரி வழக்குத் தொடர்ந்த சட்ட நிறுவனமொன்றைச் சேர்ந்த வழக்கறிஞர் கீதார்த்தன் குலசேகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதன்படி, தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருந்த 60 பேரில் 25 பேர் மட்டுமே நேற்றைய விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர்களில் 13 பேர் தமிழர்கள் என்றும் 8 பேர் முஸ்லிம்கள் எனவும் மற்றையவர்கள் சிங்களவர்கள் என்றும் அவர்கள் அரசியல் தஞ்சம் கேட்டவர்கள் அல்லவென்றும் விசா அனுமதியின்றி தங்கியிருந்தவர்கள் என்றும் குலசேகரன் சுட்டிக்காட்டினார்.

திருப்பி அனுப்பப்படாமல் தடுக்கப்பட்டவர்கள் அவர்களின் தஞ்சக்கோரிக்கை மீளாய்வுக்காக முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 18 பேர்வரையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகி மீண்டும் தப்பித்து பிரிட்டனுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு முறையிட்டுள்ளதாகவும் குலசேகரன் மேலும் கூறினார்.

இதேவேளை, தஞ்சம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக வெளிவரும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.