'லலித்-குகன் கடத்தலுடன் அரசபடைகளுக்கு தொடர்பு': சட்டத்தரணி வாதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 செப்டம்பர், 2012 - 17:22 ஜிஎம்டி
காணாமல்போன குகன் மற்றும் லலித்

காணாமல்போனோரின் குடும்பங்கள் சார்பில் போராட்டம் நடத்த சென்றிருந்தபோது கடந்த ஆண்டு டிசம்பரில் காணாமல்போன லலித் மற்றும் குகன் பற்றி இதுவரை தகவல் இல்லை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பாக யாழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் மூன்று விடயங்கள் சாட்சியங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.

லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு ஒன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் நீதிமன்றத்திற்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்றும் இன்றும் யாழ் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற விசாரணைகளின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

இந்த விசாரணைகள் பற்றி விபரம் தெரிவித்த சட்டத்தரணி நுவான் போபகே, 'லலித்குமார் குகன் ஆகியோரைக் கடத்துவதற்கு பல தடவைகள் அரச படைகள் முயன்றிருந்தன. அத்துடன் மனித உரிமைச் செயற்பாடுகளிலும் அரசியல் செயற்பாடுகளிலும் இவர்கள் ஈடுபடக் கூடாது என உயிரச்சுறுத்தல் விடப்பட்டிருந்தது. இவை தொடர்பாக ஏற்கனவே பல முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன' என்று கூறினார்.

'இந்தச் சூழ்நிலையில் இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்புப் பிரதேசத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். கடத்தப்பட்ட இவர்கள் இருவரையும் விடுதலை செய்யக்கோரி மனித உரிமை அமைப்புக்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தவிடமால் அரச படையினர் தடுத்து நிறுத்தியிருந்தார்கள்' என்று சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களை ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் மூலம் வெளிப்படுத்தி, லலித்குமார், குகன் ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் அரசபடைகளுக்கும் நேரடியாக தொடர்பு இருக்கின்றது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.